இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முயற்சித்து வருகிறார்கள்.
அதற்காக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கிய தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அதற்காக அசராத விராட், ரோஹித் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவித்து 2027 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.
வெறித்தனமான கொண்டாட்டம்:
குறிப்பாக கடந்த ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா தொடர்நாயகன் விருது வென்று தன்னை சந்தேகித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். தற்போது நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த விராட் கோலி தம்மை கழற்றி விட நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த ஒரே வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
அப்படிப்பட்ட அவர் சமீபத்திய வருடங்களில் சதமடிக்கும் போது அதை சாதாரணமாகவே கொண்டாடினார். ஆனால் தற்போதைய தென்னாப்பிரிக்க தொடரில் அடித்த 2 சதங்களையும் அவர் இளமை காலத்தில் கொண்டாடியதைப் போல வெறித்தனமாக காற்றில் துள்ளிக் குதித்து கொண்டாடியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் தம்மை கழற்றி விடத் துடிக்கும் அஜித் அகர்கர், கம்பீர் போன்றவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே விராட் கோலி அப்படி கொண்டாடுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பதிலடி கொண்டாட்டம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் ஏன் அப்படி கொண்டாடுகிறார்? அவர் என்ன சிந்திக்கிறார்? இங்கே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விட்டார் என்பதை மறக்க வேண்டாம். டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்பும் அவர் தொடர்ந்து விளையாட விரும்பினார். இருப்பினும் அது மட்டுமே தன்னுடைய தேவையில்லை என்பதால் அவர் அதை விட்டார். அடுத்ததாக அவர் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்”
இதையும் படிங்க: பிரசித் கிருஷ்ணாவை விட அவர் மோசமான பவுலரா? பும்ரா இல்லனா ஜெய்க்க முடியல.. ஹர்பஜன் விமர்சனம்
“மக்கள் என்னையும் என்னுடைய திறமையையும் சந்தேகிக்கிறார்களா? என்று விராட் கோலி சிந்தித்துக் கொண்டிருப்பார். அதை தன்னுடைய இதயத்தில் எடுத்துக்கொண்ட அவர் தன்னை சந்தேகிப்பவர்களுக்கு திறமையைக் காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார். சில சமயங்களில் நீங்கள் வலுக்கட்டாயமாக உங்களை நிரூபிக்க முயற்சிக்கும் போது அது நடக்காமல் போகலாம். கடந்த காலங்களில் அவருக்கும் அப்படி நடந்துள்ளது. ஆனால் தற்போது என்னையா சந்தேகத்தீர்கள்? என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறேன் என்ற வகையில் விராட் விளையாடுகிறார்” என்று கூறினார்.



