இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது. ஆனால் 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.
ராய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து அசத்தினார்கள். அதனால் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 49.2 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது.
ஷமி எங்கே:
அந்தளவுக்கு இந்திய அணியின் பந்து வீச்சு சுமாராக இருந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக ஹர்சித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மிகவும் மோசமாக பந்து வீசினார்கள். அதிலும் குறிப்பாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் எடுத்தாலும் 8.2 ஓவரில் 85 ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.
இந்நிலையில் பிரசித் கிருஷ்ணாவை விட முகமது ஷமி மோசமான பவுலராகி விட்டாரா? என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 2023 உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்கற்றினார்.
பும்ரா இல்லனா கஷ்டம்:
ஆனால் அப்போதிலிருந்து ஃபிட்டாக இல்லை என்று சொல்லி ஷமியை தேர்வுக்குழு கழற்றி விட்டு வருகிறது. இத்தனைக்கும் அவர் ரஞ்சிக் கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக பந்து வீசி தன்னுடைய ஃபிட்னஸை நிரூபித்துள்ளார். அப்படிப்பட்ட அவரை தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது பற்றி ஹர்பஜன் விமர்சித்தது பின்வருமாறு. “ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: 26/4 டூ 204/5.. திரிபுராவை நொறுக்கிய தமிழ்நாடு.. ஜெகதீசன் – கிசோர் அதிரடியில் 2வது வெற்றி
“பிரசித் நல்ல பவுலர் என்றாலும் அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நீங்கள் உங்களுடைய நல்ல பவுலர்களை மெதுவாக ஓரம் கட்டி விட்டீர்கள். நமது பவுலிங் பும்ரா இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லையென்றால் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பும்ரா இல்லாமல் வெற்றி பெறும் கலையை நாம் கற்க வேண்டும். இங்கிலாந்தில் அவர் இல்லாமலேயே சிராஜின் நம்ப முடியாத ஆட்டத்தால் நாம் டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அது போன்ற கலவையைக் நீங்கள் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.



