
இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வரும் ஜனவரி 11ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் மீண்டும் துணைக் கேப்டனாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலியிலிருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். எனவே அவர்களுக்கு பதிலாக திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அதில் நீண்டகாலம் கழித்து கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் தேர்வான ருதுராஜ் 2வது போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து நன்றாக விளையாடினார்.
அத்துடன் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையிலும் சதமடித்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் அவருக்கு அடுத்து நடைபெறும் நியூசிலாந்து தொடரில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்காதது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. அதே சமயம் பேக்-அப் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் நிறைய வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் ருதுராஜ் – பண்ட் ஆகியோருக்கு இடையேயான தேர்வில் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.
“ரிஷப் பண்ட் சிறப்பான வீரர். அவருடைய தரத்தில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போதைய அணியில் நீங்கள் மிடில் ஆர்டரில் நேரடியான மோதலை பார்க்கிறீர்கள். அங்கே கெய்க்வாட் – பண்ட் ஆகியோரிடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பது மட்டுமே அவருக்கு சாதகமாக அமைந்த ஒரே விஷயமாக இருந்திருக்கக்கூடும்”
இதையும் படிங்க: சுப்மன் கில்லுக்கு இப்படி நடக்கும்ன்னு எதிர்பாக்கல.. இது தான் இந்திய அணியின் ஆழம்.. பாண்டிங் பேட்டி
“இந்த தேர்வில் நிறைய விவாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாத தேர்வுக்குழு இடது கை பேட்ஸ்மேன் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து முடிவெடுத்துள்ளார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்களும் இடது கை வீரர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.