
பாகிஸ்தான் மண்ணில் வரும் பிப்ரவரி மாதம் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெற உள்ளது. அத்தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடாது என்ற செய்திகள் காணப்படுகின்றன. ஏனெனில் எல்லை பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு சென்று 2023 ஆசிய கோப்பையில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.
அதே போல இம்முறையும் தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. மறுபுறம் இந்தியா விளையாடவில்லையெனில் ஸ்பான்சர்ஷிப் வருமானம் பாகிஸ்தான் வாரியத்திற்கு குறைவாக கிடைக்கும். அதனால் எப்படியாவது இந்திய அணியை எப்படியாவது தங்களுடைய நாட்டில் விளையாட வைக்க பாகிஸ்தான் வாரியம் விரும்புகிறது.
ஆனால் இந்தியா எப்படியாவது பாகிஸ்தானில் சென்று விளையாடுவதை புறக்கணிக்க முயற்சிக்கிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் ரசித் லதீப் கூறியுள்ளார். இல்லையெனில் இந்திய அணிக்கு எதிராக வெளிநாடுகளில் ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் விளையாடுவதை கூட பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
தாமாக இருந்தால் இந்த முடிவை எடுப்பேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மொத்தமாக விளையாடுவதை நிறுத்துவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை என்னிடம் அதிகாரம் இருந்தால் இந்த முடிவை எடுப்பதில் நான் வலுவாக இருப்பேன். நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். ஒருவேளை நீங்கள் பாகிஸ்தானில் விளையாடா விட்டால் எங்களுக்கு எதிராக மொத்தமாக விளையாடாதீர்கள்”
“ஒருவேளை நான் பாகிஸ்தான் வாரியத்தில் இருந்தால் பிசிசிஐக்கு எதிராக போராடி இந்த முடிவை எடுப்பேன். என்னைப் பொறுத்த வரை இந்தப் பிரச்சினை ஓயும் வரை இரு நாடுகளுக்கும் முக்கிய தொடர்களை நடத்தும் உரிமையை கொடுப்பதை ஐசிசி நிறுத்தி வைக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை செட்டிலாகும் வரை அனைத்தையும் நிறுத்துங்கள்”
இதையும் படிங்க: ரோஹித், கோலி ரிட்டையராக போறாங்க.. அதுக்கு முன்னாடி ஆஸியில் இதை செய்யணும்.. மைக்கேல் கிளார்க் ஆசை
“ஏன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஐசிசி தடை செய்யவில்லை? ஏனெனில் அந்த நாடுகளில் இருந்து ஐசிசிக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. ஐசிசி பாதுகாப்பு குழுவினர் பாகிஸ்தானுக்கு வந்து இங்கே அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எனவே உங்களுக்கு பிரச்சனை இருந்தால் இந்தியா அவர்களிடம் புகார் சொல்ல வேண்டும்” என்று கூறினார். அத்துடன் இந்தியாவுடன் விளையாடாமல் போனால் பொருளாதார அளவில் தங்களுடைய நாடு பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.