யூனிஸ் கான் பாகிஸ்தானை விட்டுட்டு ஆப்கனுக்கு பயிற்சியாளராக இதான் காரணம்.. பரிதாபத்தை பகிர்ந்த ரசித் லதீப்

Rashid Latif
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக துபாயில் நடைபெற்ற பரம எதிரி இந்தியாவுக்கு எதிரானப் போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் போராடாமலேயே தோற்றது. அதனால் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே பாகிஸ்தான் வெறும் 5 நாட்களில் பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது.

கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஆறுதல் வெற்றியைக் கூட பெறாமல் பாகிஸ்தான் மற்றொரு பரிதாபத்தை சந்தித்தது. அதன் வாயிலாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணி என்ற கென்யா, ஸ்காட்லாந்தின் மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் சமன் செய்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தானின் யூனிஸ்:

மறுபுறம் கொஞ்சம் சிறிய அணியாக பாவிக்கப்படும் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் முறையாக வெற்றியைப் பெற்று ஆப்கானிஸ்தான் சாதனைப் படைத்தது. 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் 2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவையே தோற்கடித்து செமி ஃபைனலுக்கு சென்று சாதனைப் படைத்தது.

அந்த வெற்றிகளுக்கு முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ட்வயன் ப்ராவோ ஆகியோர் துணைப் பயிற்சியாளர்களாக செயல்பட்டு முக்கிய பங்காற்றினர். அதே போல தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் 2009 டி20 உலகக் கோப்பையை வென்ற முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வெற்றிக்கு உதவி வருகிறார். அதைப் பார்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் நம் நாட்டை விட்டுவிட்டு யூனிஸ் ஆப்கானிஸ்தானுக்கு செல்லலாமா? என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

பரிதாப காரணம்:

இந்நிலையில் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் பயிற்சியாளர்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் ரசித் லதீப் கூறியுள்ளார். அதனாலேயே யூனிஸ் கான் பாகிஸ்தானை விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி பாகிஸ்தான் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் ரசித் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: பாபர் அசாம் கிங் கோலி கிடையாது தான்.. ஆனா இந்தியா மாதிரி தோனி, ரோஹித் இருக்காங்களா? சல்மான் பட் ஆதரவு

“ஆப்கானிஸ்தான் அணியுடன் வேலை செய்வதற்காக பாகிஸ்தான் வாரியத்திடம் யூனிஸ் கான் முடியாது என்று சொல்லி விட்டார். ஏனெனில் இங்கே பொருளாதார அளவில் எந்த பயனுமில்லை” எனக் கூறினார். மறுபுறம் உள்ளூரில் நிலவும் சூழ்நிலைகளை தெரிந்து கொள்வதற்காகவே அந்நாட்டின் முன்னாள் வீரர்களை 2023 உலகக் கோப்பை முதல் துணைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுப்பதாக ஆப்கானிஸ்தான் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் கூறியுள்ளார்.

Advertisement