ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி இதுவரை 132 போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் அந்த அணியில் இருந்து வெளியேறி புதியதாக துவங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியால் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்.
இந்த வருஷம் என்னுடைய தடுமாற்றத்திற்கு இதுதான் காரணம் : ரஷீத் கான்
அப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வந்த அவர் அந்த அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகாலமாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த அவர் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சற்று சுமாரான பந்துவீச்சையே வெளிப்படுத்தி வருகிறார்.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு மிகப்பெரும் தடுமாற்றத்திற்கு மத்தியில் அதிகளவு ரன்களை வாரி வழங்கி வரும் அவர் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமலும் தவித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில போட்டிகளாக மீண்டும் தனது பார்மை மீட்டெடுத்து வரும் அவர் நேற்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இப்படி 2025 ஐபிஎல் தொடரில் தான் தடுமாற என்ன காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு ஆரம்பகட்ட போட்டிகளில் என்னுடைய லைன் மற்றும் லென்த்தை தவறவிட்டேன். மேலும் நான் பந்துவீச நினைத்த இடத்தில் என்னால் பந்து வீச முடியாமல் போனது.
அதற்கு காரணம் யாதெனில் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். இப்படி ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வரும்போது நம்முடைய ரிதத்தை பிடிக்க சற்று நேரம் பிடிக்கும். அந்த வகையில் தான் இந்த தொடரில் என்னால் சிறப்பாக பந்துவீச முடியாமல் போனது. ஆனால் தற்போது மெல்ல மெல்ல சிறப்பான பார்மிற்கு திரும்பி உள்ளதாக உணர்கிறேன்.
இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு அடுத்து தனித்துவமான சாதனை நிகழ்த்திய – சுப்மன் கில்
கிட்டத்தட்ட 75 முதல் 80 சதவீதம் வரை என்னுடைய பார்மை மீட்டெடுத்து விட்டேன். இனிவரும் போட்டிகளில் அறுவை சிகிச்சை செய்ததை எல்லாம் மறந்துவிட்டு சரியான இடத்தில் பந்துவீச காத்திருக்கிறேன். இந்த போட்டியில் சாய் கிஷோர் மிகச் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.



