
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரரும், கேப்டனுமான ரஷீத் கான் சர்வதேச கிரிக்கெட்டில் தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில் தற்போது 25 வயதாகும் ரஷீத் கான் டி20 கிரிக்கெட்டில் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தி கிரிக்கெட் உலகையே பிரமிக்க வைத்திருக்கிறார். அந்த சாதனை குறித்த தகவலை இங்கு காணலாம்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமான ரஷீத் கான் இதுவரை 103 ஒருநாள் போட்டிகள், 93 டி20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 121 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
ஐபிஎல் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் முக்கிய வீரராக இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது ரஷீத் கான் டி20 கிரிக்கெட்டில் படைத்த சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல், பி.பி.எல், பி.எஸ்.எல், கரீபியன் லீக், RSA லீக், எம்.எல்.சி என அனைத்து தொடர்களையும் சேர்த்து 600 விக்கெட்டுகளை டி20 போட்டிகளில் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக 600 டி20 விக்கெட்டுகளை வெகு விரைவாக வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான டுவைன் பிராவோ 543 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஆனால் ரஷீத் கான் 438 போட்டியிலேயே 600 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிலும் குறிப்பாக 25 வயதாகும் இவர் இன்னும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் டி20 கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்பதனால் நிச்சயம் அவர் ஓய்வு பெறும் முன்னர் 1200-1300 விக்கெட்டுகளை கூட வீழ்த்த வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : அது வேணும்னா கொஞ்சம் தியாகம் பண்ணியாகனும்.. ரசிகர்கள் ரெடியா இருப்பாங்க.. ஐசிசிக்கு ராகுல் டிராவிட் அட்வைஸ்
இந்த பட்டியலில் இவருக்கு அடுத்து இம்ரான் தாஹீர் 502 விக்க்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், ஷாகிப் அல் ஹசன் 492 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.