ரெக்கமண்டேசன்’ல வந்த அவரோட திறமை என்னனு தெரியாதா? ரமீஸ் ராஜா விளையாடிய பின்னணியை அம்பலமாக்கிய வாசிம் அக்ரம்

Ramiz Raja Wasim akram
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக முழு திறமையை வெளிப்படுத்தி நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் ஜாம்பவான் வீரர்கள் ஓய்வுக்கு பின் தங்களது கேரியரில் சந்தித்த சவால்களை சுயசரிதையாக வெளியிடுவது வழக்கமாகும். அந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் “சுல்தான் : ஒரு நினைவுக் குறிப்பு” என்ற பெயரில் தன்னுடைய கிரிக்கெட் கேரியர் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பின்னணிகளை சுயசரிதை புத்தகமாக வெளியிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் அதிக விக்கெட்களை எடுத்த இடது கை வேகப் பந்து வீச்சாளராக போற்றப்படும் அவர் ஸ்விங் செய்வதில் சுல்தான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

wasim akram

- Advertisement -

அப்படிப்பட்ட தரமான அவர் தனது கேரியரில் சலீம் மாலிக் போன்ற முன்னாள் வீரர்கள் தன்னை வேலைக்காரர்களாக நடத்திய கொடுமைகள் போன்ற நிறைய சவால்களையும் யாரும் அறியாத நிகழ்வுகளையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வரிசையில் மற்றொரு முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய வாரிய தலைவர் ரமீஷ் ராஜா பரிந்துரையின் பெயரில் விளையாடியதாக வித்யாசமான தகவலை வெளியிட்டுள்ளார். 1984 – 1997 முதல் பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் 57 டெஸ்ட் மற்றும் 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரமீஷ் ராஜா ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அந்நாட்டு வாரியத்தின் 36வது தலைவராக செயல்பட்டு வருகிறார்.

ரெக்கமண்டேசன் ரமீஸ்:

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2833 ரன்களை 31.83 என்ற சராசரியிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 5841 ரன்களை 32.09 என்ற சராசரியிலும் எடுத்து களத்தில் சுமாராக செயல்பட்டது போலவே வாரியத்தின் தலைவராகவும் அவர் சுமாராக செயல்படுவதாக பெரும்பாலான ரசிகர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக தரமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது, சொந்த நாட்டில் இருக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர்களுக்கு பயிற்சியாளராக வாய்ப்பு கொடுக்காமல் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது போன்றவைகள் அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Ramiz Raja

அதை விட ஏற்கனவே விரிசல் நிலவும் இந்தியாவை மில்லியன் டாலர் அணி, ஒரே வருடத்தில் 3 முறை தோற்கடித்தோம் என தலைவர் என்பதையும் தாண்டி விதவிதமாக விமர்சிப்பதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அந்த காலத்தில் அவரது தந்தை சலீம் அக்தர் பாகிஸ்தான் காவல் துறையில் உயரிய பதவியில் இருந்த காரணத்தாலும் மிகப்பெரிய அந்தஸ்து கொண்ட கல்லூரியில் பயின்ற காரணத்தாலும் ரமீஸ் ராஜாவுக்கு பாகிஸ்தான் அணியில் பரிந்துரையின் பெயரில் தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதாக வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் முக்கிய போட்டிகளில் கேட்ச்களை தவற விட்டாலும் கேப்டனாக அந்த சமயங்களில் எதுவும் சொல்ல முடியவில்லை என்று தெரிவிக்கும் வாசிம் அக்ரம் இது பற்றி குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியின் அடுத்த நாளில் உள்ளூரைச் சேர்ந்த ஆசிப் பரிதி என்பவர் பந்து வீசினார். அவருக்கு அடுத்தபடியாக என்னிடம் புதிய பந்து வந்தது. அதை பயன்படுத்தி நான் 4வது ஓவரை வீசிக் கொண்டிருந்த போது நியூசிலாந்து கேப்டன் ஜான் ரைட் 2வது ஸ்லிப் பகுதியில் எட்ஜ் கொடுத்தார். ஆனால் தன்னுடைய பேட்டிங் நுணுக்கங்களை போலவே ரமீஸ் ராஜா அதை நழுவ விட்டார். அந்த இடத்தில் இட ஒதுக்கீடு காரணமாக அவர் நின்றார்”

Wasim-Akram

“ஏனெனில் அவருடைய தந்தை கமிஷனர் என்பதுடன் அவர் “ஐட்சிசன்” கல்லூரியில் படித்தவராக இருந்தார். ஆனால் உண்மையாக வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் அவர் தனது கேரியரில் பிடித்த கேட்ச்களை விட கோட்டை விட்ட கேட்ச்களே அதிகமாகும்” என்று எழுதியுள்ளார். அதாவது நிறைய கேட்ச்களை விட்டும் இட ஒதுக்கீடு மற்றும் பரிந்துரைகள் காரணமாக நீண்ட காலம் ரமீஸ் ராஜா விளையாடியதாக வாசிம் அக்ரம் வெளிப்படையாக கூறியுள்ளார். முன்னதாக அந்த இருவரும் இணைந்து இம்ரான் கான் தலைமையில் கடந்த 1992 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement