
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்கியுள்ளார். உள்ளூரில் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவுக்காக அண்டர்-19 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் 2008 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாடி வரும் அவர் இந்தியாவின் நிறை வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இதுவரை 27000+ ரன்கள் குவித்து 84 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படுகிறார். தற்போது 36 வயதாகும் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அதற்கு முன் அவரையும் ரோஹித் சர்மாவையும் வயதை காரணமாக வைத்து கழற்றி விட கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் முயற்சித்து வருகிறார்கள். அதற்காக ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரிலும், விராட் கோலி தென்னாபிரிக்கா தொடரிலும் தொடர்நாயகன் விருது வென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
அதனால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் அவர்கள் டாப் 2 பேட்ஸ்மேன்களாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளனர். அத்துடன் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் ஆந்திராவுக்கு எதிராக 299 சேசிங்கில் 131 ரன்கள் அடித்த விராட் கோலி டெல்லியை எளிதாக வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி முழுமையாகத் தயாராகியுள்ளதாக அவரது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
அதனால் அகர்கர், கம்பீரால் அவரை தடுத்து நிறுத்த முடியாது என்று மறைமுகமாக தெரிவிக்கும் ராஜ்குமார் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பயங்கரமான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி அதை விஜய் ஹசாரே கோப்பையிலும் தொடர்கிறார். சமீபத்தில் இந்தியாவுக்காக 2 சதங்கள் அடித்த அவர் மீண்டும் சூப்பராக பேட்டிங் செய்து வேகத்தைத் தொடர்கிறார். அவரது ஆட்டத்தால் டெல்லி வென்றது. நீண்ட காலம் கழித்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள விராட் உண்மையிலேயே சூப்பரான இன்னிங்ஸ் விளையாடினார்”
இதையும் படிங்க: 101 ரன்ஸ்.. சுதர்சன், ஜெகதீசன் அசத்தல்.. பாண்டிசேரியை வீழ்த்திய தமிழ்நாடு அணி.. அடுத்த போட்டி விவரம் இதோ
“அற்புதமான ஃபார்மில் இருப்பதை அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் அடித்து காண்பித்தார். அந்த வகையில் விளையாட்டுடன் சிறப்பான தொடர்பில் இருக்கும் அவர் இந்திய அணியில் மிகவும் நிலையான வீரராக திகழ்கிறார். அதனால் உலகக்கோப்பையில் விளையாட அவர் முழுமையாக தயாராக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று கூறினார்.