101 ரன்ஸ்.. சுதர்சன், ஜெகதீசன் அசத்தல்.. பாண்டிசேரியை வீழ்த்திய தமிழ்நாடு அணி.. அடுத்த போட்டி விவரம் இதோ

TamilNadu
- Advertisement -

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் டிசம்பர் 24ஆம் தேதி பல்வேறு நகரங்களில் துவங்கியது. அந்தத் தொடரில் நாராயன் ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாடு அணி தங்களது முதல் போட்டியில் பாண்டிச்சேரியை எதிர்கொண்டது. அப்போட்டி அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாண்டிச்சேரி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் 83 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அதில் சாய் சுதர்சன் அரை சதத்தை நழுவ விட்டு 48 (48) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் கேப்டன் ஜெகதீசன் நிதானமாக விளையாடி 67 (91) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தமிழ்நாடு அசத்தல்:

அடுத்ததாக ஜோடி சேர்ந்த பிரதோஷ் பால் – பாபா இந்திரஜித் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். அந்த ஜோடியில் பிரதோஷ்பால் அரை சதமடித்து 73 (79) ரன்களும் பாபா இந்திரஜித் அதிரடியாக 42 (37) ரன்களும் எடுத்தனர். லோயர் ஆர்டரில் சன்னி சந்து அதிரடியாக 31 (14) ரன்களை குவித்த உதவியுடன் 50 ஓவரில் தமிழ்நாடு அணி 310/7 ரன்கள் குவித்தது.

பாண்டிச்சேரி அணிக்கு அதிகபட்சமாக சாகர் உதேசி, அடில் ஆயுப் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்கள். அடுத்த விளையாடிய பாண்டிச்சேரி அணிக்கு சியாம் கங்கையன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் வேதாந்த் பரத்வாஜ் 17, ஆகாஷ் கர்கெவ் 15, சித்தான்த் 37, புகழேந்தி ஆகாஷ் 21, கேப்டன் அமன் கான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள்.

- Advertisement -

அடுத்த போட்டி விவரம்:

மறுபடியும் நங்கூரமாக விளையாடிய கங்கையனும் அரை சதமடித்து 60 (68) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் மாரிமுத்து விக்னேஸ்வரன் 33* ரன்கள் எடுத்துப் போராடியும் மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் 46.5 ஓவரில் பாண்டிசேரியை வெறும் 201 ரன்களுக்கு சுருட்டி வீசிய தமிழ்நாடு அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: என்கிட்ட பந்து வந்தா.. என்னோட வேலை இதுதான்.. இதுதான் டீம்ல என்னோட ரோல் – வருண் சக்கரவர்த்தி

தமிழ்நாடு அணிக்கு பந்து வீச்சில் குர்ஜப்நீத் சிங் 4, சாய் கிஷோர், சச்சின் ரதி சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இந்த வெற்றியால் எலைட் குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு அணி 4 புள்ளிகளைப் பெற்று தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அணி தங்களது அடுத்தப் போட்டியில் மத்தியப்பிரதேசத்தை டிசம்பர் 26ஆம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement