அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்வி இந்திய ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியதோடு, ரோகித் சர்மாவையும் அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது.
நிர்வாகத்திற்கும், ரோஹித் சர்மாவிற்கும் இடையே எந்த பிளவும் இல்லை :
ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரோகித் சர்மா 10 ரன்கள் சராசரியுடன் வெறும் 31 ரன்கள் மட்டுமே குவித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்மீது அதிகளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக பும்ராவை அறிவிக்க வேண்டும் என்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் நிலவி வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் தொடருக்கு முன்னதாக மும்பையில் நடைபெற்று முடிந்த பிசிசிஐ மீட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பி.சி.சி.ஐ முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த மீட்டிங்கின்போது சாம்பியன்ஸ் டிராபி வரை தான் கேப்டனாக இருக்க விரும்புவதாக ரோகித் சர்மா நிர்வாகத்திடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் கேப்டன் ரோகித் சர்மாவிற்கும், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியிருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளரான ராஜீவ் சுக்லா சில வெளிப்படையான உண்மை கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அந்த வகையில் ராஜீவ் சுக்லா கூறுகையில் : தற்போது பொதுவெளியில் ரோகித் சர்மா குறித்து பரவிவரும் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மீது ரோகித் சர்மாவுக்கு எவ்வித விரோதமும் இல்லை. மேலும் அவர்களுக்குள் எந்த ஒரு பிளவும் ஏற்படவில்லை. இதெல்லாம் சமூக வலைதளத்தில் தவறாக பரப்பப்படும் கருத்துக்கள்.
இதையும் படிங்க : பார்ம் அவுட்டானதன் எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக – ரோஹித் சர்மா எடுத்துள்ள புதிய முடிவு
எங்களை பொறுத்தவரை தற்போது வரை ரோகித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டன். சாம்பியன்ஸ் டிராபி தொடர்வரை அவர்தான் கேப்டனாக நீடிப்பார். எனவே இந்த விடயத்தில் எதுவும் உண்மை கிடையாது. ரோகித் சர்மா யாருடனும் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை. அவரே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கேப்டனாக நீடிப்பார் என்று இந்த விவகாரங்களுக்கு எல்லாம் ராஜீவ் சுக்லா முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



