
ஐபிஎல் 2025 பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கொல்கத்தாவில் மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 174-8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 56, சுனில் நரேன் 44 ரன்கள் எடுத்தனர்.
பெங்களூருவுக்கு அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய பெங்களூருவுக்கு துவக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி 56 (31) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய நம்பிக்கை நாயகன் விராட் கோலி தமது பங்கிற்கு அரை சதத்தை அடித்து 59* ரன்கள் குவித்தார்.
இறுதியில் கேப்டன் படிதார் 34 (16), லிவிங்ஸ்டன் 15* (5) ரன்கள் எடுத்ததால் 16.2 ஓவரிலேயே ரன்கள் எடுத்த பெங்களூரு எளிதாக வென்று இத்தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் பேட்டிங்கில் ஃபினிஷ் செய்யத் தவறிய கொல்கத்தா முதல் போட்டியிலேயே தோற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு க்ருனால் பாண்டியா, சுயஸ் சர்மா ஆகிய 2 ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றியதாக பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறியுள்ளார்.
மேலும் மகத்தான விராட் கோலி எப்போதும் உதவிக்கு இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்று அழுத்தம் இருந்தாலும் எனக்கு நல்ல நாளாக அமைந்தது. இது போல நாங்கள் தொடர்ந்து வென்றால் நல்ல நாட்களாக அமையும். சுயஸ் ரன்கள் கொடுப்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அவர் எங்களுடைய விக்கெட் எடுக்கும் பவுலர். எனவே அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம்”
“க்ருனால், சுயஸ் ஆகியோருக்கு அனைத்து பாராட்டுக்களும் செல்ல வேண்டும். 13வது ஓவரில் இருந்து அவர்கள் திடத்தையும் தைரியத்தையும் காட்டினார்கள். அவர்களுடைய விக்கெட் எடுக்கும் மனநிலை அபாரமானது. விராட் கோலி போன்ற வீரர் உங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பதற்காக இருக்கிறார்”
இதையும் படிங்க: 16.2 ஓவரிலேயே 177.. சால்ட், கோலி மிரட்டல்.. கொல்கத்தாவை நொறுக்கிய ஆர்சிபி.. 3 வருட கம்பேக் வெற்றி
“அவரைப் போன்ற கிரேட் வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ராணாவுக்கு எதிராக அடித்த ஷாட் முன்னதாகவே தீர்மானித்தேன். கவர் திசைக்கு மேலே அடிக்க முயற்சித்தேன். ஆனால் பந்து தாமாக பேட்டில் பட்டு சென்றது” என்று கூறினார். அந்த வகையில் பற்றி இத்தொடரின் முதல் போட்டியிலேயே பெங்களூரு 2 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.