2011 ஐபிஎல் தொடரில் டக் அவுட்டானதால் ராஜஸ்தான் ஓனர் கன்னத்தில் அடிச்சாரு – திடுக்கிடும் பின்னணியை பகிரும் நியூசி ஜாம்பவான்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் தங்களது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் தொடர்ச்சியாக நீண்ட காலம் விளையாடி சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஜாம்பவானாகவும் நட்சத்திரமாகவும் போற்றப்பட்டு விடை பெறுவார்கள். பொதுவாக எந்தத் துறையிலுமே ஒருவர் மிகப்பெரிய அளவில் சாதிப்பதற்கு முன்பாக நிறைய சவால்களையும் சில அவமானங்களையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக உருவெடுக்கும் வீரர்களும் தங்களது கேரியரில் நிறைய சவால்களை எதிர்கொண்டு சாதிக்கும் போது அதில் பெரும்பாலான சவால்கள் ரசிகர்களுக்கும் வெளி உலகிற்கும் தெரியாது.

இருப்பினும் தாங்கள் சந்தித்த இன்னல்கள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அது போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பின் அதை தங்களது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய சுய சரிதையில் குறிப்பிடுவார்கள். அந்த வரிசையில் கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்ற நியூசிலாந்தின் ஜாம்பவான் ராஸ் டைலர் தனது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய சுய சரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரராக சாதனை படைத்துள்ள அவர் “ராஸ் டைலர் : ப்ளாக் & வைட்” என்ற பெயரில் வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தில் நியூசிலாந்து அணிக்குள்ளேயே சக அணி வீரர்களிடம் நிறவெறி கேலி கிண்டல்களுக்கு உள்ளானதாக சமீபத்தில் தெரிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

டக் அவுட்டுக்கு அடி:
அந்த நிலைமையில் அவரது புத்தகத்தின் மற்றொரு அத்தியாயம் நியூசிலாந்தின் பிரபல இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய அவர் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது ஏற்பட்ட அனுபவங்களையும் சவால்களையும் சந்தித்த அவமானங்களையும் இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 2008ல் பெங்களூரு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் அதில் சுமாராக செயல்பட்டதால் பின்னர் ராஜஸ்தான், டெல்லி, புனே ஆகிய அணிகளுக்காக 2014 வரை விளையாடினார்.

- Advertisement -

அதில் ராஜஸ்தான் அணிக்காக முதல் முறையாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட 2011 சீசனில் சிறப்பாக செயல்பட தவறியதுடன் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு முக்கிய போட்டியில் டக் அவுட்டானதால் கோபமடைந்த ராஜஸ்தான் அணி உரிமையாளர் மெதுவாகவும் இல்லாமல் வேகமாகவும் இல்லாமல் சிரித்துக்கொண்டே 3 – 4 முறை கன்னத்தில் அடித்ததாக திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

“நீங்கள் குறிப்பிட்டளவு பணத்தைப் பெறும் போது அதற்கு தகுதியாக செயல்பட வேண்டும் என்று உறுதியாக நினைப்பீர்கள். மேலும் உங்கள் மீது முதலீடு செய்பவர்களும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று எதிர்பார்ப்பார்கள். அதுதான் விளையாட்டு மற்றும் மனிதனின் இயற்கையான குணமாகும். அந்த வகையில் நான் பெங்களூரு அணியில் விளையாடினேன். ஒருவேளை அங்கு நான் சிறப்பாக செயல்பட்டிருந்தால் அணி நிர்வாகம் என் மீது அடுத்த முறை நம்பிக்கை வைத்திருக்கும். அதன்பின் புதிய அணிக்கு நீங்கள் செல்லும்போது அந்த ஆதரவும் உங்களுக்கு இருக்காது. மேலும் அங்கு எந்த பெரிய ஸ்கோரையும் பெறாமல் 2 – 3 போட்டிகளில் விளையாடினால் நீங்கள் தீவிரமாக கண்காணிக்கப் படுவீர்கள் என்பதை அறிவீர்கள்”

- Advertisement -

“அந்த வகையில் ஒரு முறை ராஜஸ்தான் அணிக்காக மொகாலியில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 195 ரன்களை துரத்தும் போது நான் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட்டானதால் எங்களால் அந்த இலக்கைத் தொட முடியவில்லை. அந்த போட்டிக்கு பின் அணி நிர்வாகம், துணை பயிற்சியாளர்கள் ஆகிய அனைவரும் ஒரு ஹோட்டல் பாரின் மேல்தளத்தில் இருந்தனர். அங்கே ஷேன் வார்னேவுடன் லிஸ் ஹுர்லி இருந்தார். அப்போது ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்னிடம் “ராஸ், நீங்கள் டக் அவுட்டாவதற்காக நாங்கள் உங்களுக்கு மில்லியன் டாலர்களை வழங்கவில்லை” எனக்கூறி 3 – 4 முறை எனது கன்னத்தில் அறைந்தார்”

“சிரித்துக்கொண்டே அறைந்த அவர் கடினமாக அறையவில்லை. ஆனால் அதற்காக அது விளையாட்டுத் தனமான செயல் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. அந்த சூழ்நிலையில் நான் அதை ஒரு பெரிய சிக்கலாக செய்யவில்லை. ஆனால் பல விளையாட்டு தொழில் முறைகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் பொதுவாக டக் அவுட்டாவது சகஜமான ஒன்று என்ற நிலைமையில் அதற்காக ஜாலியாக அடிக்கிறேன் என்ற பெயரில் ராஸ் டைலர் கண்ணத்தில் ராஜஸ்தான் அணி உரிமையாளர் அறைந்தார் என்பதை கேட்டு தற்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அந்த சமயத்தில் கைநீட்டி பணத்தை வாங்கிய உரிமையாளரிடம் பதிலுக்கு எதுவும் சொல்லவும் முடியாமல் அமைதியாக சென்றதாக தெரிவிக்கும் ராஸ் டெய்லர் உலகம் முழுவதிலும் நடைபெறும் விளையாட்டுகளில் இதுபோன்ற நிகழ்வு சத்தமில்லாமல் நடைபெறும் என்பதை நினைத்தால் தான் வேதனையாக இருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement