இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள 31 போட்டிகள் தற்போது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக தற்போது ஒவ்வொரு அணிகளாக ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன.

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பல அணிகள் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளன. அதில் குறிப்பாக அதிகமாக பாதிக்கப்படும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் கஷ்டப்படும் ராஜஸ்தான் அணி தற்போது பட்லர் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பினால் பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது.
தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக இந்த தொடரில் பட்லர் விளையாடமாட்டார் என்று அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மேலும் இரண்டு வீரர்கள் தற்போது வெளியான மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கால வரையின்றி ஓய்வு எடுத்துக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பமாட்டார் என்று தெரிகின்றது.

ஏனெனில் கொரோனா காலத்தில் தொடர்ச்சியாக பயோ பபுளில் இருந்து போட்டிகளில் விளையாடி வந்ததால் மனரீதியாக அழுத்தத்தில் இருக்கும் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளதால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

அதேபோன்று காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஆர்ச்சர் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அவர் வரும் t20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்பதால் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வாய்ப்பு இல்லை. இப்படி இங்கிலாந்து அணியை சேர்ந்த மூன்று நட்சத்திர வீரர்களையும் இழந்து ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



