ஐபிஎல் 2022 பைனலில் விளையாடப்போகும் 2 அணிகள் இதுதான் – முன்னாள் இங்கிலாந்து வீரரின் கணிப்பு

IPL
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி ஒரு மாதத்தை கடந்து இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்ற 74 போட்டிகளில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடர் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. மே 22-ஆம் தேதியுடன் முடிந்த அந்த சுற்றில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என சாதனை படைத்துள்ள மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் ஆரம்பத்திலேயே சந்தித்த தொடர் தோல்விகளால் முதல் 2 அணிகளாக வெளியேறின.

அதேபோல் ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் தேவையான வெற்றிகளை பதிவு செய்யத் தவறியதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாமல் நடையைக்கட்டின. அதே சமயம் அனுபவமில்லாத கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆரம்பம் முதலே மிரட்டிய குஜராத், சஞ்சு சாம்சன் தலைமையில் சீரான வெற்றிகளைப் பெற்று வந்த வரலாற்றின் முதல் சாம்பியன் ராஜஸ்தான், கேஎல் ராகுல் தலைமையில் அசத்திய லக்னோ மற்றும் மும்பையின் மாபெரும் உதவியால் டெல்லியை முந்தி 4-வது இடத்தை பிடித்த பெங்களூரு ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

பிளே ஆஃப்:
இதை தொடர்ந்து மே 24இல் நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளும் மே 25இல் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் அடுத்த 2 இடங்களை பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிகள் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற பேச்சுக்கள் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்படுகிறது.

இதில் 2008இல் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் 13 வருடங்கள் கழித்து 2-வது கோப்பையை வெல்லுமா அல்லது காலம் காலமாக கோப்பைக்காக போராடி ஏமாற்றத்துடன் திரும்பி வரும் பெங்களூரு புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் முதல் கோப்பையை முத்தமிடுமா அல்லது முதல் சீசனிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்திய குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளில் யாரேனும் ஒருவர் கோப்பையை தட்டி செல்வார்களா என்ற நால்முனை எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பைனல் அணிகள்:
அத்துடன் கோப்பைக்காக பைனலில் பலப்பரீட்சை நடத்த போகும் 2 அணிகள் எது என்றும் கணிப்புகள் வலம் வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் பைனலில் விளையாடப் போகும் அணிகளைப் பற்றிக் கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக வெற்றி பெறும். அத்துடன் உண்மையை சொல்ல வேண்டுமெனில் முதல் 2 இடங்களை பிடித்த இந்த இரு அணிகள் தான் இந்த வருடம் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்தை தோற்கடிக்கும் ராஜஸ்தான் நேரடியாக பைனலுக்கு செல்லும் என்று கிராம் ஸ்வான் கூறியுள்ளார். மேலும் இதில் தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பாக எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் மோதுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில் எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியை குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் தோற்கடித்து மீண்டும் பைனலுக்குள் நுழையும் என்று யாருமே நினைக்காத வித்தியாசமான கணிப்பை கிரேம் ஸ்வான் கணித்துள்ளார்.

வரலாறு என்ன:
கடந்த 2011இல் முதல்முறையாக பிளே ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை நடைபெற்றுள்ள 11 சீசன்களில் 3 முறை மட்டுமே குவாலிஃபயர் 1 போட்டியில் மோதிய அணிகளில் எதுவுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் போனது. ஆச்சரியப்படும் வகையில் எஞ்சிய 8 சீசன்களில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து குவாலிபயர் 1 போட்டியில் மோதி அணிகள்தான் இறுதிப்போட்டியில் மோதியுள்ளன.

இதையும் படிங்க : அடுத்த வருடம் கண்டிப்பாக ஆர்சிபி’க்கு வருவேன். எதற்கு தெரியுமா? – ஏபி டீ வில்லியர்ஸ் கூறியது இதோ

அதாவது கடந்த 11 சீசன்களில் 8 முறை குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்த அணிகள் மீண்டும் எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியை குவாலிபயர் 2 போட்டியில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் கிரேம் ஸ்வான் கணிப்பு நிஜமாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றே கூறலாம்.

Advertisement