சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக களமிறங்காத மகேந்திரசிங் தோனி மற்றும் இரண்டு வருடங்கள் விளையாடாத சுரேஷ்ரெய்னா ஆகிய இருவரும் மார்ச் 3ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தங்களது பயிற்சியை துவக்கினர். இதனால் ரசிகர்கள் கரகோஷமிட்டு சமூக வலைதளங்களில் அவர்களை வரவேற்றனர்.
ஆனால் கரோனா வைரஸ் காரணமாக, துரதிஸ்டவசமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பயிற்சியின்போது தனது ஆசான் மகேந்திர சிங் தோனி எவ்வாறெல்லாம் செயல்பட்டார், எவ்வளவு துடிப்பாக இருந்தார் என்பது பற்றி தெரிவித்துள்ளார் சுரேஷ்ரெய்னா. இதுகுறித்து அவர் கூறுகையில்…
நாங்கள் பயிற்சியை துவங்கிய முதல் சில நாட்கள் தோனி ஜிம்மில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார். வலை பயிற்சியின்போது வித்தியாசமான பல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொண்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரது உடலும் எப்போதும் போல் ஆரோக்கியமாக இருந்தது. பல மணி நேரங்கள் நாங்கள் பயிற்சி செய்தோம்.
ஆனால் அவரிடம் சிறிது கூட புத்துணர்ச்சி தொலைந்துவிடவில்லை. உற்சாகத்துடன் இருந்தார் . இந்த ஐபிஎல் தொடரில் தோனி தனது பேட்டிங் முறையில் பல மாற்றங்களை செய்து இருந்தார். அவருடன் நான் பல ஆண்டுகள் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால், இந்த வருட தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது என்று நினைத்தேன்.
அவர் வெறித்தனமாக தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தொடர் நடைபெறவில்லை. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது நீங்கள் அவரது ருத்ர தாண்டவத்தை பார்ப்பீர்கள் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா. ஆனால் தற்போதைக்கு ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது சந்தேகம் என்றே தோன்றுகிறது.
இருப்பினும் பி.சி.சி.ஐ எப்படியாவது இந்த வருட ஐ.பி.எல் தொடரை நடத்தியே ஆகவேண்டும் என்று பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. எப்படியாவது ஒருவாய்ப்பு கிடைத்தாலும் இந்த தொடரை நடத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் பி.சி.சி.ஐ உளள்து. ஏனெனில் திட்டமிட்டபடி இத்தொடர் நடைபெறவில்லை என்றால் பெருமளவு நிதியிழப்பு ஏற்படும் என்பதால் பி.சி.சி.ஐ இந்த விடயத்தில் ஆர்வம் காட்டி வருகிறது.