முதல்ல மேட்ச் நடக்குமான்னு பாருங்க, இந்தியா – பாக் போட்டியை அறுத்தும் மழை, முதற்கட்ட வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு போட்டியிடும் 16 அணிகளில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக நிலவுகிறது. ஏனெனில் அண்டை நாடுகள் இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக கருதாமல் கவுரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வார்கள்.

அத்துடன் எல்லைப் பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுவதால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளுக்கு முன்பை விட மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதை விட 1992 முதல் உலக கோப்பை வரலாற்றில் பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து தொடர்ச்சியாக வீர நடை போட்டு வந்த இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக தோற்று அவமானத்திற்கு உள்ளானது. அந்த வகையில் மோசமான வரலாற்றை மாற்றி எழுதிய பாகிஸ்தான் சமீபத்தில் அதே துபாயில் மீண்டும் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் தோற்றாலும் சூப்பர் 4 சுற்றில் வென்று இந்தியாவை பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

- Advertisement -

மேட்ச் நடக்குமா பாருங்க:
அதனால் எஞ்சியிருக்கும் பழைய கணக்கை இந்த உலக கோப்பையில் தீர்த்து பாகிஸ்தானை பழி வாங்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. மறுபுறம் கடைசியாக சந்தித்த 3 போட்டிகளில் 2 வெற்றிகளை சுவைத்த பாகிஸ்தான் இம்முறையும் இந்தியாவை தோற்கடிக்க தயாராகி வருகிறது. போதாக்குறைக்கு கடந்த உலக கோப்பையில் வரலாற்று வெற்றியை பெற ஆட்டநாயகன் விருது வென்ற முக்கிய பங்காற்றிய சாஹீன் அப்ரிடி சமீபத்திய ஆசிய கோப்பையில் காயத்தால் பங்கேற்கவில்லை என்றாலும் இந்த உலக கோப்பையில் களமிறங்குகிறார்.

ஆனால் மறுபுறம் புவனேஸ்வர் குமார் போன்ற டெத் ஓவர்களில் ரன்களை வழங்கும் மித வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அது போக இந்த உலக கோப்பையில் முதலிரண்டு நாட்களிலேயே ஆசிய சாம்பியன் இலங்கையை நமிபியாவும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸை ஸ்காட்லாந்தும் அசால்ட்டாக தோற்கடித்ததால் இப்போட்டியில் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலும் எகிறியுள்ளது.

- Advertisement -

அப்படி எதிர்பார்ப்புக்கு மத்தியில் அனல் பறக்கப் போகும் இப்போட்டி சுமார் 1 லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் ஏற்கனவே விற்றுத் தீர்ந்த நிலையில் இப்போட்டியை காண்பதற்காக ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. ஆனால் குறுக்கே இந்த கௌஷிக் வந்தால் என்பது போல் இப்போட்டியில் தாமும் கொஞ்சம் விளையாடி பார்க்க வருண பகவான் தயாராகியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமான செய்தியாக அமைகிறது.

ஆம் இப்போட்டி நடைபெறும் அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மெல்போர்ன் நகரில் 100% வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்நாட்டில் இருந்து கிடைக்கும் முதற்கட்ட வானிலை அறிக்கை கூறுகிறது. குறிப்பாக போட்டி நாளன்று காலையிலேயே 70% எனத் தொடங்கும் மழைக்கான வாய்ப்பு உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணி முதல் இரவு 12 மணி வரை முறையே 83%, 83%, 85%, 84%, 84%, 83%, 83%, 82%, 82%, 82%, 81%, 80% உள்ளது. அதிலும் குறிப்பாக போட்டி நடைபெறும் 7 – 11 மணி வரை சராசரியாக 80% மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிகிறது.

இதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பதில் மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதால் முதல் கட்டமாக கணிக்கப்பட்டுள்ள வானிலை போட்டி நாளன்று மாறும் என்று நம்பலாம். அவ்வாறு நடந்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிந்தளவுக்கு இப்போட்டியின் முடிவை காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். மொத்தத்தில் ஒரு வருடமாக அனைவரும் காத்திருக்கும் இப்போட்டி முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் பிரார்த்தனையாக தற்போது மாறியுள்ளது.

Advertisement