ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் 223 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் குவித்தனர். அடுத்து 224 ரன்கள் எடுத்தால் சாதனை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களையும், ராகுல் திவாதியா 31 பந்துகளில் 53 ரன்களையும் குறித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்கள் குவித்தார். இறுதியில் மூன்று பந்துகளில் மிச்சம் வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ராகுல் திவாதியா கூறுகையில் : முதல் 20 பந்துகளை சந்தித்து மோசமாக விளையாடினேன். இது போன்று எப்பொழுதும் நான் விளையாடியது கிடையாது. பயிற்சியின் போது நான் சிறப்பாகவே விளையாடினேன். அதனாலேயே அணி வீரர்கள் இறுதி வரை என் மீது நம்பிக்கை வைத்து இருந்தனர். நானும் என் மீது முழு நம்பிக்கை வைத்து இருந்தேன். நான் துவக்கத்தில் சரியாக ஆடாத போது எங்களது சக அணி வீரர்கள் இருக்கும் இடத்தை பார்த்தேன்.
அவர்கள் ஒவ்வொருவரும் எனது அதிரடிக்காக காத்திருந்தார்கள். இருப்பினும் என்னால் சில பந்துகளை அடிக்க முடியும் என்றும் அவர்கள் நினைத்திருப்பார்கள். இறுதியில் நான் ஒரு சிக்ஸர் அடித்தது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அதன் பின்னர் காட்ரெல் ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசியது அபாரமாக இருந்தது. அணியின் பயிற்சியாளர் என்னை லெக் ஸ்பின்னர்களை டார்கெட் செய்து சிக்சர்களை அடிக்கும்படி இறக்கினார். ஆனால் நடந்தது முற்றிலும் வேறுவிதமானது நான் ஸ்பின்னரை அடிக்காமல் வேகப்பந்து வீச்சாளரை அடித்தேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.