ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நேற்று நடந்த ஒன்பதாவது ஐபிஎல் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. இதில் மயங்க் அகர்வால் 106 ரன்களும், ராகுல் 69 ரன்களும் குவித்தனர். மொத்தம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 11 சிக்ஸர்களையும், 20 பவுண்டரிகள் என அட்டகாசமாக அதிரடியாக முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பெற்றது. இவர்களது இன்னிங்சில் மொத்தம் 18 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் என அசத்தியது. அதாவது 19.3 ஓவர்களில் 226 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை செய்யப்பட்ட அதிகபட்ச சேசிங்காக இந்த போட்டி அமைந்தது.
இந்த போட்டியில் சாதனை நாயகன் யார் என்றால் ஆமை வேகத்தில் விளையாடி இறுதி கட்டத்தில் தனது அதிரடி மூலம் அரை சதத்தை அடித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்த ராகுல் திவாதியா என்றால் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் முதல் 20 பந்துகளில் மிகவும் மோசமாக விளையாடி ஆமை வேகத்தில் ரன் சேர்த்த அவர் அதன் பின்னர் சந்தித்த 10 பந்துகளில் 7 சிக்சர்களை விரட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றியையும் தேடித் தந்தார்.
முதலில் அவர் ஆட ஆரம்பித்த போது ஸ்பின்னர்களை முழுவதுமாக சரியாக அடிக்க முடியவில்லை. தொடர்ந்து சொதப்பலாக அவர் விளையாடிக் கொண்டிருக்கையில் சஞ்சு சாம்சன் மற்றும் அணி வீரர்களும் சற்று வருத்தத்திலேயே காணப்பட்டனர். ஆனால் அதன்பிறகு தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்தார். செல்டன் காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் 5 சிக்சர்கள் பறக்கவிட்டு தனது அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்த அவர் இறுதியில் 31 பந்துகளை சந்தித்த அவர் 53 ரன்கள் குவித்து மொத்த ஆட்டத்தையும் ஒரே ஓவரில் திருப்பிவிட்டார்.
இதன் காரணமாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது என்று கூடக் கூறலாம் .அந்த அளவிற்கு அவரது ஆட்டம் சிறப்பாக அமைந்தது. துவக்கத்தில் அவரது ஆமை வேக ஆட்டத்தை பார்த்து அனைவரும் ஜீரோ என்று நினைத்து இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இறுதியில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்து ஒரே இரவில் ஹீரோவாக மாறியுள்ளார். இவர் குறித்து உங்களது கருத்து என்ன ?