தோனியின் வெறித்தனமான சாதனையை சமன் செய்த இளம் வீரர் ! சிலைவைக்க கோரிக்கை வைக்கும் சேவாக்

Rahul tewatia Odean Smith
- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 16-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் சந்தித்தன. கடைசி பந்து வரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் பஞ்சாப்பை பதம் பார்த்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள குஜராத் ஹாட்ரிக் வெற்றிகளுடன் இந்த வருடம் இதுவரை தோல்வி அடையாத ஒரே அணியாக புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் ஜொலிக்கிறது.

முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189/9 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் 30 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 35 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அசத்திய லிவிங்ஸ்டன்:
இருப்பினும் அவருடன் மறுபுறம் பட்டையை கிளப்பிய இங்கிலாந்தின் அதிரடி வீரர் லியம் லிவிங்ஸ்டன் குஜராத் பவுலர்களை புரட்டி எடுத்து வெறும் 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்களை விளாசி அவுட்டானார். கடைசி நேரத்தில் ராகுல் சஹர் 22* (14) எடுத்து நல்ல பினிஷிங் கொடுக்க குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரசித் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 190 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும் அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து தனது அணியை மீட்டெடுத்தார். 2-வது 101 ரன்கள் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 35 (30) ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய கில், தனிஒருவன் திவாடியா:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி வந்த தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக 59 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 96 ரன்கள் எடுத்திருந்த போது சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு முக்கியமான 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது 27 (8) ரன்கள் எடுத்து களத்தில் இருந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா அபாரமாக பினிஷிங் செய்வார் என எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா 2-வது பந்தில் சிங்கிள் எடுக்க 3-வது பந்தில் பவுண்டரியை பறக்கவிட்ட தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 4-வது பந்தில் சிங்கிள் எடுத்தார். அதன் காரணமாக கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எதிர்கொண்ட ராகுல் திவாடியா அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு வெறித்தனமான பினிஷிங் கொடுத்து தனி ஒருவனாக குஜராத்தை வெற்றிபெற வைத்தார். மறுபுறம் கடைசி நேரத்தில் வெற்றியை கோட்டை விட்ட பஞ்சாப் நெஞ்சை உடைத்துக் கொள்ளும் அளவுக்கு பரிதாப தோல்வியைச் சந்தித்தது.

- Advertisement -

சிலை வைங்க:
இந்த அற்புதமான வெற்றிக்கு 96 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் கடைசி 2 பந்துகளில் மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு பினிஷிங் செய்த ராகுல் திவாடியாயை தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். ஏனெனில் அந்த சிக்சர்களை அவர் அடிக்கவில்லை என்றால் இந்த வெற்றியை குஜராத் பெற்றிருக்காது. அதைவிட இந்த போட்டியில் தனி ஒருவனாக பஞ்சாப்பை தோற்கடித்த ராகுல் திவாடியா ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஒரு போட்டியிலும் இதேபோல பஞ்சாபை தனி ஒருவனாக தோற்கடித்தார்.

ஷார்ஜா நகரில் நடந்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்தி பேட்டிங்கில் தடுமாறி நின்ற ராஜஸ்தானுக்கு அப்போது களமிறங்கிய ராகுல் திவாடியா ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசி நேரத்தில் விஸ்வரூபமெடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் செல்டன் காற்றெள் வீசிய 18-வது ஓவரில் 5 இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு போட்டியை தலைகீழாக மாற்ற தனி ஒருவனாக வெற்றிபெற வைத்தார்.

தற்போது குஜராத் அணிக்காக விளையாடிய அவர் கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றாமல் மீண்டும் பஞ்சாபை பந்தாடி மண்ணைக் கவ்வ வைத்துள்ளார். இதை பார்த்த பெரும்பாலான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பஞ்சாப் அணி என்றால் இவருக்கு கொள்ளைப் பிரியம் போல என்று சமூக வலைதளங்களில் கலகலப்புடன் பேசி வருகிறார்கள். அதிலும் பஞ்சாப் அணியின் அறையில் திவாடியாவுக்கு சிலை வைக்க வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

முன்னதாக இப்போட்டியில் அடுத்தடுத்த சிக்சர்களை விளாசி வெற்றி பெற வைத்த ராகுல் திவாடியா ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றிபெறச் செய்த வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் எம்எஸ் தோனியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆம் கடந்த 2016 ஆம் ஆண்டு புனே அணியின் கேப்டனாக விளையாடிய எம்எஸ் தோனி இதே பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து வெற்றி பெறச் செய்தார். தற்போது அவருக்கு பின் இந்த அற்புதமான சாதனையை படைத்த 2-வது வீரர் என்ற பெருமையை திவாடியா பெற்றுள்ளார்.

Advertisement