நம்ம முடியாத வெற்றி.. இப்படி ஒரு மேட்சை பாத்திருக்கமாடீங்க – கடைசி ஓவரில் குஜராத் வெற்றி பெற்றது எப்படி?

SRH vs LSG
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற 40-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஹைதராபாத்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சனை 5 (8) ரன்களில் கிளீன் போல்டாக்கிய முகமது சமி அடுத்து வந்த ராகுல் திரிப்பாதியையும் 16 (10) ரன்களில் எல்பிடபிள்யூ செய்தார்.

Abishek Sharma

- Advertisement -

அதனால் 44/2 என ஆரம்பத்திலேயே ஹைதராபாத் தடுமாறினாலும் அடுத்து களமிறங்கிய மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். 5-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் நங்கூரமாக நின்று குஜராத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஹைதெராபாத் அசத்தல்:
குஜராத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 16-வது ஓவரில் பிரிந்த இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா 6 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (42) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் பொறுப்பின்றி 3 ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார். மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரமும் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (40) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் கடைசி நேரத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய இளம் வீரர் சஷாங் சிங் யாருமே எதிர்பாராத வகையில் அதிரடியாக பவுண்டரிகளை தெறிக்க விட்டார்.

Saha GT

குறிப்பாக லாக்கி பெர்குசன் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வெறும் 6 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 25* ரன்கள் குவித்து அபார பினிஷிங் செய்ததால் 20 ஓவர்களில் 195/6 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை ஹைதராபாத் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 196 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சஃகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர்.

- Advertisement -

மிரட்டிய உம்ரான் மாலிக்:
ஆனால் அப்போது அதிரடியாக பந்து வீசிய இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சுப்மன் கில்லை 22 (24) ரன்களில் பிரித்து அடுத்த சில ஓவர்களிலேயே குஜராத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 (6) ரன்களில் காலி செய்தார். அந்த நிலைமையில் 38 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் உட்பட 68 (38) ரன்கள் எடுத்து அதிரடியாக வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்த ரித்திமான் சகாவையும் 153 கி.மீ வேகத்திலான யார்கர் பந்தில் கிளீன் போல்டாக்கி உம்ரான் மாலிக் 15-வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் டேவிட் மில்லர் 17 (19) ரன்களிலும் அபினவ் மனோகரை கோல்டன் டக் அவுட் செய்தும் போட்டியை மொத்தமாக ஹைதராபாத் பக்கம் திருப்பினார்.

Umran Malik Pace

அதனால் கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டதாலும் ஏற்கனவே குஜராத் 5 விக்கெட்டுகளை இழந்து விட்ட காரணத்தாலும் ஹைதராபாத் தான் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய ராகுல் திவாடியா அதிரடியாக சிக்சர்களை பறக்க விட்டதால் போட்டியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது அதை தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த மேக்ரோ யான்சென் வீச முதல் பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட திவாடியா 2-வது பந்தில் சிங்கிள் எடுக்க 3-வது பந்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிக்சரை பறக்க விட்ட ரஷீத் கான் 4-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் 5-வது பந்தில் மீண்டும் மெகா சிக்சரை பறக்க விட்டு திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

அந்த பரபரப்பான நிலையில் கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் மிரட்டலான சிக்ஸரை தெறிக்க விட்ட அவர் குஜராத்துக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இதில் ரஷித் கான் 4 சிக்சர் உட்பட 31* (11) ரன்களும் ராகுல் திவாடியா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 40* (21) ரன்களும் எடுத்து 59* (30) ரன்கள் தெறிக்கவிடும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத் வெற்றியை பறித்தனர் என்றே கூறலாம்.

Rahul tewatia Rashid Khan

இந்த வருடம் இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே ரசிகர்கள் பார்க்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்பாராத திருப்பங்களுடன் த்ரில்லாக அமைந்த இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. இந்த வெற்றியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மறுபுறமும் உம்ரான் மாலிக் அட்டகாசமாக பந்துவீசி கொண்டுவந்த வெற்றியை இதர ஹைதராபாத் பவுலர்கள் கோட்டை விட்டதால் அந்த அணி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Advertisement