41 வயதிலும் இவரது கிரிக்கெட் வெறி இன்னும் அடங்கவில்லை – பஞ்சாப் கேப்டன் ராகுல் நெகிழ்ச்சி

Rahul

ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKXIP

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 45 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 25 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

துவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்த அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு மூன்றாவதாக கிறிஸ் கெயில் வந்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் நிக்கலஸ் பூரன் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

pooran

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறியதாவது : இந்த போட்டியின் இறுதியில் எனது இதயத்துடிப்பு அதிகரித்தது. சொல்வதற்கு வார்த்தை இல்லை. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரியும் இருப்பினும் கடைசி நொடி வரை போட்டி சிறப்பாக சென்றது. கச்சிதமாக போட்டியை முடிந்ததில் மகிழ்ச்சி. நாங்கள் மிகப் பெரிய வெற்றியாக இதனை மாற்ற முடியாமல் போனது.

- Advertisement -

இருப்பினும் எங்களது திறமைகளை இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுத்தினோம். இந்த வெற்றியின் மூலம் அணிக்குள் ஒரு நம்பிக்கையை கொண்டுவர முயற்சிக்கிறோம். இந்த தொடர் நான் கேப்டனாக செயல்படும் முதல் தொடர் எனவே என்னுடைய எண்ணம் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே உள்ளது. நான் என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தைப் பற்றி பெரிதாக யோசித்தது கிடையாது. அணியின் வெற்றி குறித்து யோசித்து வருகிறேன். கெயில் கடந்த இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

Gayle

இருப்பினும் 41 வயதிலும் இவருக்கு கிரிக்கெட் மீதுள்ள பசி அபாரமானது. எப்பொழுது விளையாட வந்தாலும் முதல் நாளாக நினைத்து அவர் வெறித்தனமாக விளையாடுகிறார். பயிற்சியிலும் அவர் கடினமாக ஈடுபடுகிறார். பந்துகளை வெளியே அடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இன்னமும் உள்ளது. எப்பொழுது இவர் பேட்டிங் செய்ய வந்தாலும் இவர் ஒரு அபாயகரமான வீரர். அவருக்கு எதிராக வரும் சவால்களையும் அவர் சிறப்பாக கையாளுகிறார் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.