இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கருக்கு பின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10,000 ரன்கள் அடித்த ஒரே இந்திய வீரராக அவர் சாதனை படைத்துள்ளார். ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக செயல்படும் அவருடைய வழிகாட்டுதலில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் தம்முடைய காலத்தில் விளையாடிய சக வீரர்களை பார்த்து தம்முடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்காக காப்பி அடித்ததில்லை என்று டிராவிட் தெரிவித்துள்ளார். மாறாக அவர்களுடைய மரியாதையைப் பெறுவதற்கே தாம் முயற்சித்ததாக ட்ராவிட் கூறியுள்ளார். அதே சமயம் அவர்களைப் பார்த்து தம்முடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்காக பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
சக வீரர்களின் உதவி:
தம்முடைய சக வீரர்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் டிராவிட் பேசியது பின்வருமாறு. “நான் அவர்களை காப்பியடித்ததாக நினைக்கவில்லை. ஆனால் லக்ஷ்மன் மட்டுமன்றி என்னுடைய அனைத்து சக வீரர்களிடமும் நான் குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொண்டேன். அது என்னுடைய ஆட்டத்தை சிறப்பாக மாற்றியது. உடைமாற்றும் அறையை சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி, லக்ஷ்மன், கௌதம் கம்பீர் ஆகியோருடன் நான் நீண்ட காலம் பகிர்ந்து கொண்டேன்”
“அவர்களிடமிருந்து அவர்கள் எப்படி தயாராகிறார்கள், எப்படி குறிப்பிட்ட ஷாட்டுகளை அடிக்கிறார்கள், எப்படி குறிப்பிட்ட விஷயங்களை செய்கிறார்கள் போன்றவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். அணிக்குள்ளேயே அவர்களால் நீங்கள் சவாலை சந்தித்து தள்ளப்படலாம். நீங்கள் சச்சின், லக்ஷ்மன்,கங்குலி ஆகியோருடைய மரியாதையை கற்றுக்கொள்ள விரும்புவீர்கள்”
முன்னேறிய டிராவிட்:
“குறிப்பாக அவர்கள் உங்களைப் பார்த்து “சரி, இந்தப் பையனாலும் விளையாட முடியும்” என்று சொல்வதை நீங்கள் விரும்புவீர்கள். இவரும் நம்முடைய அறையில் இருப்பதற்கு தகுதியானவர் என்று அவர்கள் சொல்வதை நீங்கள் சம்பாதிக்க விரும்புவீர்கள். அது போன்ற வார்த்தைகள் உங்களுடைய நல்ல செயல்பாடுகள் மற்றும் செய்கைகளால் மட்டுமே வரும்”
இதையும் படிங்க: 2014 ஆக்லாந்து டெஸ்டில் தோனி தில்லா அடிச்சுரு.. விராட் கோலியை ஈஸியா தூக்கிட்டேன்.. நெய்ல் வாக்னர்
“அந்த வார்த்தைகள் கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் அடித்தால் மட்டுமே வரும். எனவே அதுவே எனக்கு உத்வேகமாக இருந்தது. உங்களது சக வீரர்களிடம் நீங்கள் அந்த அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அவர்களும் உங்களுடைய ஆட்டத்தை புரிந்து கொள்வார்கள். அவர்கள் அனைவரிடமும் நான் நிறைய பேசியுள்ளேன். எனவே அவர்கள் அனைவருமே என்னை ஒரு சிறந்த வீரராக மாற்றியதற்கு உதவினார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல நானும் அவர்களுடைய ஆட்டத்தில் கொஞ்சம் முன்னேறுவதற்கு உதவியிருப்பேன் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



