
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இன்று தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்க அணிகளை தோற்கடித்த இந்தியா இந்தப் போட்டியிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக லீக் சுற்று நடைபெற்ற அமெரிக்க மைதானம் வேகத்துக்கு சாதகமாகவும் பேட்டிங்க்கு சவாலாகவும் இருந்தது.
அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் கூட ரன்கள் குவிப்பதற்கு தடுமாறினார். ஆனால் தற்போது சூப்பர் 8 போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளன. அங்குள்ள மைதானங்கள் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. குறிப்பாக பந்து வீச்சில் வேகத்தை விட ஸ்பின்னர்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
டிராவிட் பதில்:
எனவே சூப்பர் 8 சுற்றில் இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை கொண்டு வர வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப் அல்லது சஹால் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.
“ஒவ்வொரு சூழ்நிலையும் வித்தியாசமானது. நாங்கள் எங்களுடைய சிந்தனையை வளைவுத் தன்மையுடன் வைத்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உட்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய நேரங்களில் இது போன்ற மாற்றங்கள் எங்களுடைய மனதில் இருக்கும். சில நேரங்களில் அது வேலை செய்யும். சில நேரங்களில் செய்யாது. ஆனால் அனைத்தையும் முந்தைய முடிவை வைத்து எங்களால் தீர்மானிக்க முடியாது”
“எடுத்துக்காட்டாக பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் அக்ச்சர் பட்டேலை மேல் வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பினோம். ரிஷப் பண்டையும் மேலே இறக்கியுள்ளோம். டி20 ஃபார்மெட்டில் நீங்கள் மைதானத்தின் அளவு மற்றும் எதிரணியின் சேர்க்கையை வைத்து பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுவதை பார்க்கின்றீர்கள். இதுவரை எங்கள் அணியில் வாய்ப்பு பெறாத எஞ்சிய 4 வீரர்களும் தரமானவர்கள்”
இதையும் படிங்க: இந்திய வீரரான அவருக்கு எதிராக பந்துவீசுவது உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் – ரஷீத் கான் ஓபன்டாக்
“போட்டியின் சூழ்நிலை மற்றும் மைதானத்தை வைத்து தான் எங்களுடைய அணியின் சேர்க்கையை தீர்மானிக்கிறோம். அந்த வரிசையில் இங்கே குல்தீப் அல்லது சஹால் போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனாலேயே நாங்கள் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று கூறினார். இதனால் சஹாலை விட நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.