இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் என்று வர்ணிக்கப்படும் அவர் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்த பெருமைக்குரியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா கடைசியாக டிராவிட் தலைமையில் தான் இங்கிலாந்து மண்ணில் (2007) தொடரை வென்றது.
2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு பயிற்சியாளராக முக்கிய பங்காற்றிய டிராவிட் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வரலாற்றில் கிரிக்கெட்டில் சற்று உயரம் குறைவானவர்களே மகத்தான பேட்ஸ்மேன்களாக உருவாகி சாதனை படைத்ததாக டிராவிட் தெரிவித்துள்ளார். அதே போல உயரமான பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி எதிரணிக்கு ஆபத்தானவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறுகிய உயரம் கிரேட்:
குறுகிய உயரத்தைக் கொண்டவர்களின் ஈர்ப்பு மையம் கீழே இருப்பதே அதற்கு முக்கிய காரணம் என்று டிராவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து எடுத்துக்காட்டுடன் அவர் பேசியது பின்வருமாறு. “கவாஸ்கர் மிகவும் அழகான சமநிலை நிறைந்த வீரர். அவர் நிற்கும் போது அசைவின்மை இருக்கும். அதைத்தான் நான் மிகவும் போற்றுகிறேன். நான் கொஞ்சம் உயரமானவர் என்பதால் அவரைக் காப்பியடித்ததில்லை”
“எனக்கு அசௌகரிய உணர்வைக் கொடுக்காத நிலையில் நான் நின்று பேட்டிங் செய்தேன். அதே போல டெண்டுல்கர் மிகவும் சமநிலையான வீரர். பொதுவாகவே கொஞ்சம் குறுகிய உயரம் கொண்டவர்கள் அதிக சமநிலையைப் பெறுவதற்கான சாதகத்தைப் பெறுவார்கள். ஏனெனில் அவர்களுடைய ஈர்ப்பு விசையின் மையம் கொஞ்சம் கீழே இருக்கும்”
அதிக உயரம் ஆபத்து:
“அதையே அவர்களும் சொல்கிறார்கள். கடந்த பல வருடங்களில் குறுகிய உயரம் கொண்டவர்களே மகத்தான பேட்ஸ்மேன்களாக இருந்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக கவாஸ்கர் அல்லது சச்சின் அல்லது லாரா அல்லது பாண்டிங் அல்லது நீண்ட காலத்துக்கு முன்பிருந்த பிராட்மேன் ஆகியோரை சொல்லலாம். விராட் கோலியும் அதே வகையை சேர்ந்தவர். குறுகிய உயரம் கொண்டவர் என்று நான் சொல்வதை விராட் விரும்ப மாட்டார்”
இதையும் படிங்க: விராட், ரோஹித், புஜாராவுக்கு மரியாதை கொடுக்காத பிசிசிஐ செயல் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.. ஸ்ரீகாந்த்
“ஆனால் இன்று போட்டி மாறிக்கொண்டு வருகிறது. போட்டிகள் அனைத்தும் பவர் மற்றும் சிக்ஸர்களை அடிப்பதைப் பொறுத்து அமைகிறது. அதற்கு உயரமான பையன்களாக இருப்பது சாதகமாக அமைகிறது. இது பற்றிய விவரங்களை உங்களுக்கு இயற்பியல் சொல்லும். எடுத்துக்காட்டாக கெவின் பீட்டர்சன், கைரன் பொல்லார்ட், கிறிஸ் கெய்ல் ஆகியோரை சொல்லலாம். இன்று டி20 கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கும் பேட்ஸ்மேன்களின் உயரத்தைப் பாருங்கள்” என்று கூறினார்.



