ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிறைவு பெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தோல்வியை சந்திக்காமல் 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
அந்த வெற்றியால் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் மைதானத்தில் ஆனந்த கண்ணீர் விட்டனர். அதே போல நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் அந்த வெற்றியை வெறித்தனமாக கொண்டாடினார்கள். ஏனெனில் 2013ஆம் ஆண்டு கடைசியாக தோனி தலைமையில் இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
வெறித்தனமான டிராவிட்:
அதன் பின் 10 வருடங்களாக எவ்வளவோ முயற்சித்தும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அதை இம்முறை உடைத்த இந்தியா புதிய வரலாறு படைத்தது. குறிப்பாக சச்சினுக்கு நிகராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஒரு வீரராக உலகக் கோப்பையை வென்றதில்லை. மேலும் அவருடைய தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2007 உலகக் கோப்பையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
ஆனால் இம்முறை அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்ற ராகுல் டிராவிட் சாம்பியனாக விடை பெற்றார். அதனாலயே டி20 உலகக் கோப்பையை மேலே உயர்த்திய டிராவிட் தன்னுடைய 24 வருட கேரியரில் மனதுக்குள் வைத்திருந்த அத்தனை ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் வெறித்தனமாக கொண்டாடினார். இந்நிலையில் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
2024 டி20 உலக கோப்பையை வெறித்தனமாக கொண்டாடியது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்படி கொண்டாடுவதை நீங்கள் திட்டமிட மாட்டீர்கள். பெரும்பாலான நேரங்களில் ஒரு பயிற்சியாளராக நான் என் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிப்பேன். ஆனால் அந்த நேரத்தில் நான் அணிக்காகவும் வீரர்களுக்காகவும் துணை பயிற்சியாளர்களுக்காகவும் மகிழ்ச்சியடைந்தேன்”
இதையும் படிங்க: நாளைக்கு இருக்க மாட்டேன்னு சொல்லி விராட், ரோஹித், எங்களை வளத்தாரு.. தோனி பற்றி சர்துள் தாகூர்
“ஏனெனில் அந்த வெற்றிக்காக என்னுடன் பலரும் கடினமாக இணைந்து வேலை செய்தனர். 2.5 – 3 வருடங்களாக நான் இந்திய அணியுடன் இருந்தேன். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் அல்லது இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை ஃபைனலில் வெற்றியை நெருங்கியும் எங்களால் கோட்டை தாண்ட முடியவில்லை. அது போன்ற நேரங்களில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் விதியும் தேவை. அது அன்றைய நாளில் எங்களிடம் இருந்தது” என்று கூறினார்.



