ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார். ஒரு வீரராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்துள்ள அவர் கிட்டத்தட்ட சச்சினுக்கு நிகராக இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதே போல வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றையும் டிராவிட் படைத்துள்ளார்.
அத்துடன் 2016 முதல் என்சிஏ இயக்குனராக செயல்பட்ட அவர் இந்தியா ஏ மற்றும் அண்டர்-19 அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டார். அவருடைய தலைமையில் தான் இந்தியா 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் சீனியர் அணிக்கும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் தற்போது இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.
தங்கமான பயிற்சியாளர்:
அந்த வகையில் ஒரு வீரராக வெல்லாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்ற டிராவிட் சாம்பியனாக விடை பெற்றார். இந்நிலையில் ரோஹித், பும்ரா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களின் சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை ஒரு போதும் ராகுல் டிராவிட் பெற்றதில்லை என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். குறிப்பாக வீரர்கள் நன்றாக செயல்படும் போது அதற்கு தாம் தான் காரணம் என்று டிராவிட் சொன்னதில்லை என அவர் பாராட்டியுள்ளார்.
அந்த வகையில் தங்கமான ராகுல் டிராவிட் தலைமையில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டதற்கு தாம் பெருமைப்படுவதாக தெரிவிக்கும் மாம்ப்ரே இது பற்றி பேசியது பின்வருமாறு. “அண்டர்-19, இந்தியா ஏ, என்சிஏ தொடர்ந்து இந்திய அணியிலும் நான் ராகுல் டிராவிடடுடன் இணைந்து வேலை செய்தேன். இந்த 8 – 9 வருடங்களில் ராகுல் என்ன விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும்”
“பயிற்சியாளராக அவர் எப்போதும் வீரர்களுக்கு முன்னால் இருக்க மாட்டார். பின்னால் நிற்பார். அதுவே அவர் எந்தளவுக்கு தங்கமான தனிநபர் என்பதைப் பேசும். எப்போதும் வீரர்கள் மீது மட்டுமே கவனத்தை செலுத்தக்கூடிய அவர் தன்னைப் பற்றி சிந்திக்க மாட்டார். பாராட்டுகளை எடுத்துக் கொள்ள எப்போதும் விரும்பாத அவரை நீங்கள் வீரர்களின் பின்னால் பார்க்க முடியும்”
இதையும் படிங்க: 2 ஆவதாக ஒரு வீரரும் விலகல்.. இலங்கை அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி – எப்படி தாக்குப்பிடிக்க போறாங்களோ
“கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருக்கும் அவர் தனது உயரத்தைப் பற்றி சிந்திக்காமல் “நான் பின்னால் அமர்ந்து கொள்கிறேன். கேப்டன் மற்றும் அணி முன்னோக்கி செல்லட்டும்” என்று சொல்லக்கூடிய பண்பு தனித்துவமானது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ஐபிஎல் அணியில் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.



