ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார். ஒரு வீரராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் குவித்துள்ள அவர் சச்சினுக்கு நிகராக இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிள்ளார். அதே போல வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
இருப்பினும் 2007 உலகக் கோப்பையில் கேப்டனாக தோல்வியை சந்தித்த அவர் வீரராக ஒரு உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆனால் தற்போது இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் பயிற்சியாளராக சாம்பியன் பட்டம் வென்று விடை பெற்றுள்ளார். குறிப்பாக 2007இல் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக் கோப்பையை வென்ற டிராவிட் சாம்பியனாக விடை பெற்றுள்ளார்.
ஐபிஎல் கோச்:
இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2007 மற்றும் 2011 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார். அதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கொல்கத்தா அணியில் ஆலோசகர் பதவி காலியாக உள்ளது.
அந்த பதவிக்கு இந்திய அணியிலிருந்து விடைபெற்ற ராகுல் டிராவிட்டை கொண்டு வர கொல்கத்தா அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் ராகுல் டிராவிட்டை தங்களுடைய அணியின் பயிற்சியாளராக நியமிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக 2021 முதல் ராஜஸ்தான் அணியின் இயக்குனராக இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா செயல்பட்டு வருகிறார். இருப்பினும் தற்போது அவர் இந்த வருடத்துடன் ராஜஸ்தான் அணியிலிருந்து விடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே அவருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை வென்ற டிராவிட்டை பயிற்சியாளராக கொண்டுவர ராஜஸ்தான் அணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அவரை கட்டிப்பிடிச்சு கதறி அழுத டிராவிட் கண்ணீரில் 17 வருட தோல்வி வலியை பாத்தேன்.. அஸ்வின் நெகிழ்ச்சி
சொல்லப்போனால் ராஜஸ்தானுக்காக ஏற்கனவே விளையாடியுள்ள ராகுல் டிராவிட் கேப்டனாக அந்த அணியை 2013 சாம்பியன்ஸ் லீக் டி20 ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். மேலும் 2014, 2015 வருடங்களில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராகவும் டிராவிட் செயல்பட்டார். எனவே 9 வருடங்கள் கழித்து தமக்கு பிடித்த அணியில் மீண்டும் அவர் பயிற்சியாளராக வரவுள்ளார். இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிய வருகிறது.



