
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாக களம் காண்கிறது.
அதோடு சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாட இருப்பதினால் இந்த உலககோப்பை தொடரை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையிலேயே இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான பலமான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியை எச்சரிக்கும் வகையில் ஒரு சில கருத்துக்களை முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது.
அதனால் இந்த உலக கோப்பையிலும் இந்தியா தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதோடு அரையிறுதி வரை நிச்சயம் இந்திய அணி எந்த ஒரு பிரச்சனையும் இன்றி முன்னேறுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் எனது கசப்பான அனுபவத்திலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொண்டேன். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் நாம் தொடர்ந்து பத்து வெற்றிகளை பெற்றோம்.
இதையும் படிங்க : கடந்த ஓராண்டாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து மனம்திறந்து பேசிய – சர்பராஸ் கான்
ஆனால் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவில் தோற்று கோப்பையை இழந்தோம். எனவே டி20 உலக கோப்பை தொடரை பொருத்தவரை நாம் எவ்வளவு தான் பலமான அணியாக இருந்தாலும் போட்டியின் ஒரு மோசமான நாள் முடிவை மாற்றலாம் எனவே எச்சரிக்கையாக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும் என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.