இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தனது 14-வது வயதிலேயே அறிமுக வாய்ப்பினை பெற்றதனால் மிக இளம் வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். அதுமட்டும் இன்றி தான் விளையாடிய முதல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சிக்சர் அடித்து தனது ரன் குவிப்பை அட்டகாசமாக துவங்கினார். அதன்பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிவேக சதத்தையும் விளாசி அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷியின் தந்தையிடம் பேசிய ராகுல் டிராவிட் :
அதன்மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர் என்பது மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிக இளம் வயதில் டி20 போட்டிகளில் சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார். அந்த ஒரு இன்னிங்ஸ்க்கு பிறகு மிகப்பெரிய வீரராக ஒரே இரவில் உயர்ந்த சூரியவன்ஷி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 206 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 252 ரன்களை குவித்துள்ளார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்திய அணிக்காகவும் மிகப்பெரிய வீரராக வருவார் என்று பலரது மத்தியிலும் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இங்கிலாந்து சென்றுள்ள அவர் 19 வயது உட்பட்டோர் இந்திய அணியில் இணைந்து உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி விளையாட ஒப்பந்தமான பின்னர் அவரது தந்தையிடம் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் டிராவிட் என்ன வாக்குறுதி வழங்கினார்? என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் அணிக்கு தேர்வானதற்கு பின்னர் சூர்யவன்ஷியின் தந்தையை சந்தித்து பேசிய ராகுல் டிராவிட் : இனி உங்களுடைய வேலை முடிந்துவிட்டது. இனிமேல் வைபவ் சூர்யவன்ஷியை பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு.
அவர் எங்களுடைய அணிக்குள் ஒருவராக வந்துவிட்டார். இனிமேல் அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனி அவர் மொபைல் ஃபோன்களில் இருந்தும், இன்டர்நெட்டில் இருந்தும் தள்ளியிருக்க வேண்டும். அதேபோன்று உணவு விடயத்திலும் சரியான டயட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் மிகப்பெரிய வீரராக வந்து இந்திய அணிக்காக விளையாட முடியும்.
இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கம்பீர் விடயத்தில் இந்திய அணிக்கு வந்த நல்ல செய்தி – விவரம் இதோ
இளம் வீரரான அவர் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். அவரை இப்போதிலிருந்து தயார் படுத்தினால் தான் அவரால் மிக நீண்ட கரியரை கட்டமைக்க முடியும். திறமையுள்ள இவரை நிச்சயம் நாங்கள் மிகப்பெரிய கரியருக்கு கொண்டு செல்வோம் என ராகுல் டிராவிட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



