இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை வென்ற கையோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதால் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்டார். அப்படி பயிற்சியாளராக வந்த கவுதம் கம்பீரின் தலைமையில் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரினை இந்திய அணியானது கைப்பற்றி அசத்தியது.
இந்திய அணியுடன் இணைந்த கவுதம் கம்பீர் :
ஆனாலும் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு திருப்பும் முனைப்புடன் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியுடன் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் அங்கு சென்றிருந்தார்.
ஆனால் கடந்த ஜூன் 11-ஆம் தேதி கௌதம் கம்பீரின் தாய்க்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக நாடு திரும்பிய அவர் அவரது தாயின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில நாட்கள் இங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது தாய் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இரு நாட்கள் முன்னதாக இன்று அவர் இந்திய அணியுடன் இணைந்துள்ளதாக நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
கம்பீர் இல்லாத நேரத்தில் இந்திய முதன்மை அணியானது இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடியது. அப்போது இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரயன் டெஸ்கோத்தே, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் லட்சுமணன் ஆகியோர் வீரர்களுடன் இருந்தனர்.
இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வுசெய்து அறிவித்த வாசிம் ஜாபர் – விராட் கோலியின் இடம் யாருக்கு?
இவ்வேளையில் தற்போது இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இன்று இந்திய அணியுடன் கம்பீர் இணைந்துள்ளார். எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடர் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் வேளையில் கம்பீரின் இருப்பு முக்கியம் என்று பார்க்கப்பட்டது. இவ்வேளையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கம்பீர் அணியுடன் இணைந்துள்ளது இந்திய அணிக்கும் நல்ல விடயமாக மாறியுள்ளது.



