இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் 17ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்குகிறது. இந்திய அணி அயல்நாட்டில் சந்திக்கும் முதல் பகல் இரவு போட்டி என்பதால் இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று அனைவரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஏற்கனவே இந்திய அணி பயிற்சி போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதியது. இந்த போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை மறுதினம் முதல் போட்டியை சந்திக்க இந்திய அணி தயாராகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டனாக இருக்கும் விராட் கோலி அதற்கடுத்த மூன்று போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் நேரடியாக இந்தியா திரும்புகிறார். அதன் பிறகு மீதி இருக்கும் மூன்று போட்டிகள் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று உறுதியாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரகானே : நாளையைப் பற்றி நான் எப்போதும் யோசித்தது கிடையாது.
இப்போது வரை எங்களை பொறுத்தவரை கோலிதான் கேப்டன். நாங்கள் இப்போது தொடங்க இருக்கும் போட்டியை மட்டும் தான் யோசித்து வருகிறோம். இந்த போட்டிக்கான திட்டத்தையே ஆலோசனை செய்து வருகிறோம். இந்த போட்டி முடிந்த பின்பே கோலி இந்தியாவிற்கு திரும்ப இருக்கிறார். அதன் பின்புதான் அடுத்த டெஸ்ட் போட்டி குறித்து எங்களது திட்டத்தை நாங்கள் வகுப்போம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய :அவர் பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பது இரு அணிகளுக்குமே சவாலானது.
ஏனெனில் பகல் நேரங்களில் பந்து ஒருவிதமாகவும், லைட்ஸ் போட்ட பின்பு பிங்க் நிற பந்து வேறு மாதிரியாகப் செயல்படும். அதனால் பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும். அதேபோல் ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புரிந்து கொண்டு அதனை எதிர்கொள்ள முடியும். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது இந்த போட்டிக்கு நாங்கள் தயாராக உதவியது என்று ரகானே கூறியது குறிப்பிடத்தக்கது.