இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ரஹானே கடந்த பல தொடர்களாகவே படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது பேட்டிலிருந்து பெரிய ரன்கள் என்பது வரவே இல்லை. இருப்பினும் அணியின் அனுபவ வீரர் என்கிற காரணத்தினாலும், துணை கேப்டனாக இருந்ததாலும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த ரகானே இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழற்றி விடப்பட்டார். அவருடன் சேர்த்து மற்றொரு சீனியர் வீரரான புஜாராவும் நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த இரண்டு சீனியர் வீரர்களுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றும் அவர்களது இடம் இளம் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் இனி புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டுமெனில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறனை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று கங்குலியும் தெளிவாக கூறியிருந்தார். இதன் காரணமாக புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ரஞ்சி தொடரில் விளையாடினார். அதில் ரஹானே சிறப்பாக விளையாடி இருந்தார்.
இருப்பினும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவரது கனவு பொய்யாகி விட்டது என்றே கூறலாம். ஏனெனில் நடப்பு சீசனில் இதுவரை அவர் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மொத்தமாக 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதோடு சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக பீல்டிங் செய்ய கூட வரவில்லை.

இதனைத்தொடர்ந்து ரஹானேவின் காயத்தை பரிசோதித்த கொல்கத்தா அணியின் மருத்துவர்கள் அவரது காயம் பெரிதாக உள்ளதாகவும் அவர் 4 வாரங்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சையில் ஈடுபடுவார் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக தற்போது ரகானே கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறி தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற இருக்கிறார். இதனால் இந்த நடப்பு தொடரிலிருந்து ரஹானே காயம் காரணமாக விலகியுள்ளார்.
மேலும் அதோடு எதிர்வரும் ரஞ்சி கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி என இரண்டிலுமே அவரால் பங்கேற்க முடியாது. இந்த இரண்டு தொடர்களுக்கு பிறகு இந்திய அணி அடுத்த ஆண்டுதான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே தற்போது ரஹானேவின் கிரிக்கெட் கேரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.
இதையும் படிங்க : ஜடேஜா இன்னும் அந்த வருத்தத்தில் தான் உள்ளார். அடுத்த ஆண்டு ஆடுவாரா? – ஜடேஜாவின் நண்பர் பேட்டி
ஏனெனில் அடுத்த ஓராண்டுக்கு ரஹானேவால் எந்தவொரு போட்டியிலும் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்ய முடியாது என்றும் அவரது இடம் இளம் வீரர்களுக்கு சென்றடையும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் புஜாரா தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வருவதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.



