ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லீ கையால் மாபெரும் விருது வாங்கிய ரச்சின் ரவீந்திரா.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

Rachin Ravindra 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் கடந்த வருடம் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி 578 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக அறிமுக உலகக் கோப்பையிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.

அதன் காரணமாக 2023ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் சர்வதேச வீரர் என்ற ஐசிசி விருதையும் ரச்சின் ரவீந்தரா வென்றார். அதைத் தொடர்ந்து இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 240 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் ஒரு போட்டியிலும் அவர் அதிரடியாக 68 (35) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஹாட்லீ கையால் விருது:
அந்த வகையில் கடந்த ஒரு வருடமாக 3 வகையான கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணிக்காக அவர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் 2023 காலண்டர் வருடத்தில் நியூசிலாந்து அணிக்காக சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்நாட்டு வாரியம் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

அதில் உலகக் கோப்பை உட்பட கடந்த வருடம் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 2023ஆம் ஆண்டின் சிறந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை வென்றார். சொல்லப்போனால் 24 வயதிலேயே நியூசிலாந்து கிரிக்கெட்டின் இந்த உயரிய விருதை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்த அவர் அதை ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லீயின் கையாலேயே பெற்றுக் கொண்டார்.

- Advertisement -

அப்படி சிறப்பாக செயல்பட்டு வருவதாலேயே அவரை ஐபிஎல் 20204 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரச்சின் ரவீந்தரா இந்த விருதை வென்றுள்ளது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் காயத்தால் விலகிய டேவோன் கான்வேவுக்கு பதிலாக அவர் இம்முறை சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

இதையும் படிங்க: யாரும் தப்பா நினைக்காதீங்க.. ஐபிஎல் 2024 தொடரில் விலகியதன் சோகமான காரணத்தை தெரிவித்த ஹரி ப்ரூக்

அதே விழாவில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதை வென்றார். மேலும் 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள டார்ல் மிட்சேல் 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதையும் ஏற்கனவே விளையாடி வரும் மிட்சேல் சான்ட்னர் சிறந்த டி20 வீரர் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement