நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து இந்தியா மோசமான சாதனையும் படைத்தது.
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 402 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா 134, டேவோன் கான்வே 91 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
போராடும் இந்தியா:
பின்னர் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 231-3 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். அதைத் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில் களத்தில் சர்பராஸ் கான் 70* ரன்களுடன் போராடி வருகிறார்.
இந்நிலையில் இப்போட்டியில் தம்முடைய அப்பா ஊரான பெங்களூருவில் அவருக்கு முன் சதமடித்தது ஸ்பெஷல் என்று நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். மேலும் 3வது நாளில் விராட் கோலி தங்களை தண்டிக்கும் வகையில் விளையாடியதாக அவர் பாராட்டியுள்ளார். ஆனால் இன்னும் 125 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இப்போட்டியில் தாங்கள் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்பாவுக்கு முன் சதம்:
இது பற்றி ரச்சின் ரவீந்திரா பேசியது பின்வருமாறு. “நாங்கள் பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முயற்சித்தோம். சௌதீயுடன் சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப் எனக்கு உதவியது. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிந்தது. பெங்களூரு பிட்ச் வித்தியாசமாக இருந்தது. அதைப்பற்றி தெரிந்து கொள்வது நன்றாக இருக்கிறது. அது பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கிறது”
இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை: 379 ரன்ஸ்.. சுந்தர் அசத்தல்.. ஆஸிக்கு நானும் வரலாமா? டெல்லியை பந்தாடிய சுதர்சன் இரட்டை சதம்
“எனது தந்தை இங்கே போட்டியை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது அவருடைய சொந்த ஊர். இங்கேயும் அவரது சில உறவினர் குடும்பங்கள் உள்ளன. உண்மையில் பெங்களூருவில் ரசிகர்கள் பெருமளவு வந்துள்ளனர். விராட் கோலி நிச்சயம் கிரேட் பிளேயர். அவர் எங்களை தண்டித்தார். ஆனால் நாங்கள் விளையாட இன்னும் நிறைய ரன்கள் உள்ளது” என்று கூறினார்.



