சி.எஸ்.கே அணியில் இணைந்த ராசி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதம் நிகழ்த்திய ரச்சின் ரவீந்திரா – விவரம் இதோ

Rachin-Ravindra
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

அதன் காரணமாக தற்போது இரண்டாம் தர தென்னாப்பிரிக்கா அணியே நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 4-ஆம் தேதியான இன்று துவங்கிய நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பாக அந்த அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன் 112 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்த போட்டியின் போது துவக்கத்திலேயே நியூசிலாந்து அணி 2 ரன்களில் இருந்த போது டேவான் கான்வே விக்கெட்டையும், 39 ரன்களில் இருந்தபோது டாம் லேதமின் விக்கெட்டையும் பறிகொடுத்தது. ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ரச்சின் ரவீந்திரா 211 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 118 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு அண்மையில் சிஎஸ்கே அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : இங்கிலாந்தின் லெஜெண்டையே மலிங்கா மாதிரி தெறிக்க விட்டுட்டாரு.. அவரை தொடுறது கஷ்டம்.. ப்ராட் பாராட்டு

இந்நிலையில் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் அதிகபட்சமாக 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வேளையில் இன்று தனது நான்காவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் தனது முதல் சதத்தை அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார். இதெல்லாம் சிஎஸ்கே அணியில் இணைந்த ராசி தான் என்று ரசிகர்கள் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement