- Advertisement -

இவங்க 4 பேருக்கு எதிராக நான் பந்துவீசனும் இதுவே என் ஆசை – காகிசோ ரபாடா ஓபன் டாக்

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடி அதன் பின்னர் 20 வயதிலேயே தென் ஆப்பிரிக்க அணிக்கு அறிமுகமானவர் காகிசோ ரபாடா. இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அறிமுகம் ஆன உடனேயே உச்சத்துக்கு சென்றார். 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் மிகவும் அசால்ட்டாக வீசக்கூடிய ஒருசில பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர்.

இன்னும் 10 வருடங்களில் பந்துவீச்சு ஜாம்பவான் என்ற நிலைக்கு உயர்ந்து விடுவார். அந்த அளவிற்கு திறமைசாலி. 2014-ஆம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடி வருகிறார். இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளையும், 75 ஒருநாள் போட்டிகள் ஆடி 117 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் .

கடந்த மூன்று தொடர்களாக டெல்லி அணிக்கு சிறப்பாக பங்களிப்பை அளித்தவர். 13வது ஐபிஎல் தொடரில் ஆட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

குறிப்பாக தற்போது மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கும் நீங்கள் கடந்த காலத்தில் உள்ள எந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவியன் ரிச்சட்ஸ் ஆகிய 4 பேருக்கும் பந்து வீசுவது சவாலாக இருக்கும். அவர்களுக்கு பந்துவீச ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட், ஸ்டீவ் வாக் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் பலரும் ரபடா பந்து வீசுவது தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவர் அளித்திருக்கும் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by