
இந்திய கிரிக்கெட்டின் இரு துருவங்களாக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த 10 வருடங்களாக இந்தியாவின் நம்பிக்கை நாயகர்களாக செயல்பட்ட அவர்கள் ஜோடியாக ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து சுப்மன் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் காணப்படுகின்றன.
இத்தனைக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா புதிய கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவராக இருக்கிறார். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா காயத்தை சந்திக்கக் கூடியவராக இருக்கிறார். எனவே பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கில்லை புதிய கேப்டனாக பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் மற்ற பவுலர்கள் தடுமாற்றமாக பௌலிங் செய்தனர்.
மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே தனி ஒருவனாக அபாரமாக பவுலிங் செய்து வெற்றிக்கு போராடினார். அதனால் கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு எக்ஸ்ட்ரா ஓவர்களை கொடுத்தார். அதனால் வேறு வழியின்றி இந்தியாவுக்காக எக்ஸ்ட்ரா ஓவர்களை வீசியது பும்ராவின் முதுகை உடைத்து காயத்துக்கு வித்திட்டது.
அதே போல வேறு யாரை கேப்டனாக நியமித்தாலும் பும்ராவை அதிகமாக பயன்படுத்தி காயமடைய வைத்து விடுவார்கள் என்று ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அதற்கு பேசாமல் பும்ரா கேப்டனாக இருந்தால் பணிச்சுமையை சரியாக நிர்வகித்து இந்தியாவுக்காக தக்க சமயத்தில் பவுலிங் செய்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இம்முறை முற்றிலும் மாறுபட்ட புதிய இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்லவிருக்கிறது. அதில் ஜஸ்ப்ரித் பும்ரா சீனியர் வீரராக இருப்பார். அவர் கேப்டன்ஷிப் செய்யக்கூடிய வீரர்களில் ஒருவர். அந்த பதவிக்கு அவர் மிகவும் தகுதியானவர். ஆனால் அவருடைய உடல் தகுதியை வைத்தே தேர்வாளர்கள் கேப்டன்ஷிப் கொடுப்பது பற்றி முடிவெடுப்பார்கள்”
இதையும் படிங்க: சச்சின் மாதிரி அவங்களை ஈர்த்த கோலியின் ஓய்வு.. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாபெரும் இழப்பு.. மொய்ன் அலி
“என்னைக் கேட்டால் நீங்கள் கேப்டனாக நியமிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் பும்ராவிடம் எக்ஸ்ட்ரா ஓவர்களை விரும்புவார்கள். ஏனெனில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கக்கூடிய அவர் எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை எடுக்கக்கூடியவர். எனவே பும்ரா கேப்டனாக இருந்தால் அவருக்கு எப்போது பவுலிங் செய்ய வேண்டும் இடைவெளி எடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதனால் அவர் மட்டுமே கேப்டனாக செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.