இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் போராடி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் 2வது போட்டியில் 359 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
அதில் வெற்றி பெற்று தொடரை வெல்வதற்கு இரு அணிகளும் தயாராக இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2 போட்டிகளிலுமே பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி சிறப்பாக ஃபினிஷிங் செய்யவில்லை என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் கட்டுப்படுத்துவதற்கு எக்ஸ்ட்ரா ரன்கள் இல்லாமல் தோற்றதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.
நல்ல ஃபினிஷர் இல்ல:
எனவே 3வது போட்டியில் ஹர்திக் பாண்டியா இடத்தில் பதிலாக ஃபினிஷிங் செய்யக்கூடிய நித்திஷ் ரெட்டியை இந்தியா விளையாட வைக்க வேண்டும் என்று அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “முதல் 2 போட்டிகளிலும் இந்தியா நன்றாக ஃபினிஷிங் செய்யவில்லை. குறிப்பாக ஹர்திக் பாண்டியா போன்ற ஃபினிஷர் இல்லாதது உங்களுக்கு பின்னடைவைக் கொடுக்கிறது”
“அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் ஏன் பவர்ஃபுல்லாக அடிக்கக்கூடிய நித்திஸ் ரெட்டியை தேர்ந்தெடுக்கக் கூடாது. அதே போல இந்திய அணி ரிசப் பண்ட்டை ஃபினிஷராக பார்க்கிறார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எனவே இந்த பிரச்சினையைத் தீர்க்க, ஒரு ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டருக்கு பதிலாக ஏன் வேகப்பந்து ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுக்கக்கூடாது?”
அஸ்வின் கருத்து:
“நாம் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சில பவுலர்களை (ஷமி) இழந்துள்ளோம். மிகவும் அனுபவமிக்க பவுலர்களை இந்தியா இழந்துள்ளது. இதன் காரணமாக நாம் வெற்றிக்கு துருப்புச் சீட்டான ஜஸ்ப்ரித் பும்ராவை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒருவேளை நாளை முக்கியமான போட்டியில் பும்ரா விளையாடாவிட்டால் இந்தியா வெற்றி பெறுவதற்கு கூடுதலாக 30 – 40 ரன்கள் அடிப்பது அவசியமாகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: அஜித் அகார்கரின் கவனத்தை ஈர்த்த முகமது ஷமி.. மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முயற்சி – விவரம் இதோ
அவர் கூறுவது போல கடந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடத் தவறியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. எனவே ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதிலாக நித்திஷ் ரெட்டி போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுப்பது நல்ல முடிவாகவே இருக்கலாம். அதை இந்திய அணி செய்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



