இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கழுத்து வலியிலிருந்து குணமடைந்த சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன் காரணமாக திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அதில் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் நீண்ட காலம் கழித்து தேர்வான ருதுராஜ் கெய்க்வாட் 2வது போட்டியில் சதமடித்து அசத்தினார். மேலும் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிராவுக்காக சதமடித்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
ரிஷப் பண்ட்டுக்கு பதில்:
இருப்பினும் அடுத்து நடைபெறும் நியூசிலாந்து தொடரில் அவருக்கு பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்காதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நியூஸிலாந்து தொடரில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மிடில் ஆடரில் சிறப்பாக விளையாடியதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மறுபுறம் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிரா அணிக்காக ருதுராஜ் 4வது இடத்தில் விளையாடி 38*, 124, 66 ரன்களை குவித்துள்ளார். எனவே 4வது இடத்தில் அவரைக் காட்டிலும் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு பொருத்தமாக இருப்பார் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.
அஸ்வின் கருத்து:
“ருதுராஜ் கெய்க்வாட் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் அவருடைய திறன் சிறப்பானது. அவருடைய சிங்கிள் டபுள் எடுப்பதற்கு வேகமாக ஓடும் திறன், போட்டியை முடிக்கும் திறன் ஆகியவை நன்றாக இருக்கிறது. எனவே நீங்கள் அவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருத்தில் கொள்ளலாம்”
இதையும் படிங்க: மோதி பாக்கலாம்.. நாங்க இந்தியாவுக்கு மொத்தமா வரமாட்டோம்.. வங்கதேசம் வைக்கும் 2 ஆப்பு.. வெளியான தகவல்
“மறுபுறம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தற்சமயத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு பொருத்தமானவர் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கவில்லை. தற்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் அவரால் ஓப்பனிங் அல்லது 3வது இடத்தில் விளையாட முடியும்” என்று கூறினார். இருப்பினும் கேஎல் ராகுலுக்கு தகுந்த பேக்-அப் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



