ஐசிசி தரவரிசையில் நட்சத்திர வீரரை முந்திய அஸ்வின் சாதனை.. கிங் கோலியை மிஞ்சி சாதித்த ஜெய்ஸ்வால்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 2 மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அதில் பஸ்பால் அணுகு முறையைப் பின்பற்றி வெல்வோம் என்று எச்சரித்த இங்கிலாந்து அணியை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அத்துடன் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி இந்தியா சாதனை படைத்தது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்து உலகின் புதிய நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

நம்பர் ஒன் இடத்தில் அஸ்வின்:
குறிப்பாக தரம்சாலாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதன் வாயிலாக தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையும் அஸ்வின் படைத்தார். அதன் காரணமாக 870 புள்ளிகளைப் பெற்ற அவர் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறி மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளார்.

- Advertisement -

மறுபுறம் முதலிடத்தில் இருந்த பும்ரா 5வது டெஸ்ட் போட்டியில் பெரிய விக்கெட்டுகளை எடுக்க தவறினார். அதன் காரணமாக சில புள்ளிகளை இழந்த அவர் 847 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவர்களுடன் ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7வது இடத்தில் பிடிக்கும் நிலையில் 4 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 15 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி அணியிலிருந்து திடீரென வெளியேறிய நட்சத்திர வீரர்.. என்ன காரணம் தெரியுமா? – விவரம் இதோ

அதே போல பேட்டிங் தர வரிசையில் தர்மசாலா போட்டியில் சதமடித்து அசத்திய கேப்டன் ரோகித் சர்மா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதை விட தொடர்நாயகன் விருது வென்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து தொடரில் விளையாடாத விராட் கோலியை 9வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி 8வது இடத்தை பிடித்து சாதித்துக் காண்பித்துள்ளார். அதே போல கடைசி போட்டியில் சதமடித்த சுப்மன் கில் 11வது இடங்கள் முன்னேறி 20வது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement