சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா முதன்மை அணிகளில் ஒன்றாக விளையாடி வருகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு நிகராக 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடம், சாம்பியன்ஸ் டிராபி போன்ற முதன்மை கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. ஆனாலும் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக இந்திய கிரிக்கெட் அணி பெரும்பாலான நேரங்களில் விளையாடுவதில்லை என்பதே நிதர்சனமாகும்.
இந்நிலையில் அதற்கு இந்திய அணியில் நியாயமற்ற சமமற்ற அணி தேர்வு நடைபெறுவதே முக்கிய காரணம் என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். குறிப்பாக இந்தியாவில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று அவர் கூறியுள்ளார். மறுபுறம் விக்கெட்டுகள் எடுத்தால் தான் போட்டியை வெல்ல முடியும் என்பதை உணர்ந்து ஆஸ்திரேலிய அணி பவுலர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவால் ஆஸியாக முடியாது:
இது பற்றி பெங்களூருவில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ரசிகரின் கேள்விக்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு. “இது நியாயமற்ற உலகம். பேட்ஸ்மேன்களுக்கு கூட்டாக ஆதரவு கிடைக்கிறது. பவுலர்களுக்கு இல்லை. நீங்கள் ஆகாஷ் தீப் மற்றுமொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை பார்க்கப் போவதில்லை. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலியாவில் அவர் போதுமான அளவுக்கு விக்கெட்டுகள் எடுக்கவில்லை”
“ஆனால் ஒரு போட்டியில் போதுமான ரன்கள் எடுக்காத மற்றொரு வீரர் இந்தியாவுக்காக விளையாடாமல் இருப்பதை உங்களால் பார்க்க முடியாது. இங்கே தான் ஆஸ்திரேலியா உலக கிரிக்கெட்டின் சக்தியாக இருப்பதையும் இந்தியா இல்லாததையும் உங்களால் பார்க்க முடியும். இந்திய அணி அனைத்தையும் கொண்டுள்ளது. ஆனால் இப்போதும் ஆஸ்திரேலியா தான் உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தி என்று நான் கருதுகிறேன்”
எடுத்துகாட்டாக ஆகாஷ், அஸ்வின்:
“ஏனெனில் அவர்களுக்கு ஆழமாக வேரூன்றத் தெரியும். அவர்கள் டெஸ்ட் போட்டிகளையும் ஐசிசி தொடர்களையும் வெல்வதற்கு பவுலர்கள் தான் முதன்மையாக தேவைப்படுவார்கள் என்பதை அறிந்தவர்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடந்த பல வருடங்களாகவே தொடர்ச்சியாக அசத்துவதற்கு தடுமாறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: டக் அவுட்டானாலும் சாதனை மாறாது.. ரஞ்சியில் கோலி இதை மட்டும் செஞ்சா ரன்ஸ் தானா வரும்.. ஹர்பஜன் சிங்
ஆனால் அவர்களுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக கடந்த வருடம் இருந்தார். இருப்பினும் அவருக்கு 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவே அஸ்வின் கூறும் கருத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



