இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் பாகிஸ்தானில் துவங்குகிறது. அந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது.
எனவே சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் நடைபெறும் இந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நல்ல ஃபார்முக்கு வருவது அவசியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர்கள் சுமாராக பேட்டிங் செய்தனர். அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேற அவர்கள் முக்கிய காரணமானார்கள்.
அஸ்வின் கருத்து:
அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி அரை சதத்தை கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்தனர். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கிய அணுகுமுறையை ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடர வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ஹர்டிக் பாண்டியா, ரிங்கு சிங் போல ஃபார்முக்கு வர விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சிக்காமல் இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா அல்லது ரிங்கு விளையாடுவது போல் விராட் கோலி விளையாடக் கூடும் என்பதை உணர்வது முக்கியம்”
இப்படியே விளையாடுங்க:
“டாப் ஆர்டருக்கும் ஃபினிஷிங் செய்ய வேண்டிய மிடில் ஆர்டருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் பாலமாக யார் இருக்கிறார்? அது 3வது இடத்தில் விளையாடும் விராட் கோலி. உண்மையில் அவர் தன்னுடைய பலத்துக்கு தகுந்தார் போல் விளையாடி ஃபார்மை கண்டறிந்து விட்டால் இந்திய அணிக்கு அதை விட வேறு எதுவும் பெரிதாக இருக்காது. அதற்கு விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தை மாற்ற வேண்டியதில்லை”
இதையும் படிங்க: அதை செய்றதுக்கு கோலி, ரோஹித் ரோபோ இல்லை.. இதை சொல்லாம மரியாதை கொடுங்க.. பீட்டர்சன் ஆதரவு
“ஒருநாள் கிரிக்கெட்டில் அவசரம் எதற்கு? அதில் கொஞ்சம் நிதானத்துடன் விளையாடுவது முக்கியம். 2023 உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் விளையாடிய விதத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாறும் காலத்திற்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொண்ட ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அணியை முன்னின்று நடத்திய டெம்ப்ளேட்டில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை” என கூறினார்.