இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அவர்கள் சுமாராக விளையாடினார்கள். அதில் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதத்தை கூட அடிக்காமல் மோசமாக விளையாடினார்.
விராட் கோலி முதல் போட்டியில் சதத்தை அடித்தும் பின்னர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தன்னுடைய விக்கெட்டுகளை பரிசளித்தார். அவர்களுடைய ஆட்டத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் ஏமாற்றமடைந்த இந்திய ரசிகர்களில் ஒரு தரப்பினர் விராட் கோலி, ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டதாக விமர்சித்தார்கள்.
பீட்டர்சன் ஆதரவு:
இந்நிலையில் அவர்களுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இவ்வளவு ரன்கள் அடித்த அவர்களை ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் சொல்வது நியாயமற்றது. ஆம் அது ஒரு விவாதம், அது ஒரு தலைப்பு என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்கள் இந்த விமர்சனங்களை விட அதிக மரியாதைக்கு தகுதியானவர்கள்”
“என்னுடைய கேரியரிலும் இது போன்ற சவால்களை நான் சந்தித்துள்ளேன். களத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் சதத்தை அடிப்பதற்கு ரோகித் மற்றும் கோலி ஆகியோர் ரோபோக்கள் அல்ல. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அவர்களுக்கு மோசமானதாக அமைந்திருக்கலாம். அது அவர்களை மோசமான வீரர்களாக மாற்றுமா? இல்லை”
ரோபோக்கள் அல்ல:
“இந்த வீரர்களும் மனிதர்கள் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் அவர்களுக்கு மூங்கில் குச்சிகளால் அடி கொடுக்கலாம். ஆனால் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்க்கும் போது அவர்கள் எப்படி விளையாடி மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்கள் என்பதை உங்களால் நன்றாக உணர முடியும். இவை அனைத்தும் புள்ளிவிவரங்களை பற்றியது மட்டும் கிடையாது”
இதையும் படிங்க: விராட் கோலிக்கு எந்த பிரச்னையும் இல்லை.. ரோஹித் சர்மாவிற்கு தான் ஆப்பு – பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்
“இவை அனைத்தும் வெற்றி தோல்விகளைப் பற்றி கிடையாது. அந்த வீரர்கள் தங்களுடைய கேரியரை முடிக்கும் போது மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றியதாகும். விராட், ரோஹித் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடியவர்கள். எனவே அவர்கள் 36, 37 வயதானவர்கள் என்பதைத் தாண்டி கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களைப் போன்ற திறமையான வீரர்கள் எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.