
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் 2 – 1* (3) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் நிலையில் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 358 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ராகுல் 46, ரிஷப் பண்ட் காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி 54 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். முன்னதாக அத்தொடரின் முதல் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி டக் அவுட்டானார்.
இருப்பினும் 2வது இன்னிங்சில் 30 ரன்கள் குவித்த அவரை அடுத்தப் போட்டியிலேயே கருண் நாயருக்காக இந்திய அணி கழற்றி விட்டது. குறிப்பாக 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள கருண் நாயர் முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடி பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் அதற்கடுத்த போட்டிகளில் அவருக்கு 3வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்த வாய்ப்பிலும் அரை சதம் கூட அடிக்காத அவர் 3வது போட்டியில் பந்தை தவறாக படித்து விக்கட்டை இழந்தது தோல்விக்கு வித்திட்டது. அதனால் அவரை கழற்றி விட்ட இந்திய அணி மீண்டும் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் 61 ரன்கள் அடித்த சுதர்சன் தம்முடைய திறமையைக் காண்பித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் சாய் சுதர்சன் 3வது பேட்டிங் இடத்தை தனதாக்குவார் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கருண் நாயர் இதற்கு முன் 3வது இடத்தில் விளையாடியதில்லை. அங்கே தற்போது விளையாட வைத்துள்ள நீங்கள் அவருடைய மனதில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். சுதர்சனுக்கு நீங்கள் பாராட்டு கொடுக்க வேண்டும். ஏனெனில் 2 – 1* என இந்தியா பின்தங்கியிருக்கும் சூழ்நிலையில் ஒரு இளம் வீரராக நீக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் போது நன்றாக பதிலளித்துள்ளீர்கள்”
இதையும் படிங்க: இந்திய நாட்டுக்காக அனில் கும்ப்ளே மாதிரி ஹேட்ஸ் ஆஃப் ரிஷப் பண்ட்.. சச்சின், பதான், குப்தா பாராட்டு
“அவர் வருங்காலங்களில் 3வது இடத்தை தனதாக்கி இந்திய அணிக்கு திடத்தை கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்போதே அவர் திடத்தன்மையை காண்பிக்கிறார். இருப்பினும் அவர் சதத்தை அடிக்காதது எனக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் நான் அவருடைய நலனை பாராட்டக்கூடியவர். தனது 2வது போட்டியிலேயே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டெக்னிக்கல் மற்றும் மனதளவில் உறுதியானவர். அவரை நீங்கள் நீக்கியிருக்கக் கூடாது” என்று கூறினார்.