இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் 54, தமிழக வீரர் சாய் சுதர்சன் 61, கேஎல் ராகுல் 46 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். முன்னதாக இத்தொடரில் 3 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. அதனால் இப்போட்டியில் வென்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா விளையாடி வருகிறது.
நாட்டுக்காக பண்ட்:
அப்படிப்பட்ட நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ரிசப் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்து 37 ரன்கள் எடுத்தார். அப்போது பாதத்தில் சந்தித்த காயத்தால் நடக்க முடியாமல் தடுமாறிய அவர் வேதனையுடன் வண்டியில் ஏறி சென்றார். அதனால் மேற்கொண்டு அவர் இப்போட்டியில் விளையாடாமல் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நாட்டுக்காக தம்முடைய காயத்தை பொருட்படுத்தாத ரிஷப் பண்ட் தைரியமாக பேட்டிங் செய்ய வந்த போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள்.
இந்த வரவேற்புக்கு மத்தியில் விளையாடிய அவர் சிங்கிள் எடுக்க முடியாமல் சிக்ஸர்களை அடித்து அரை சதத்தை பதிவு செய்து இந்தியாவை 350 ரன்களை தாண்ட உதவினார். இந்நிலையில் நாட்டுக்காக காயத்தையும் தாண்டி விளையாடிய அவரை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “வலியைக் கடந்து விளையாடுவதும் அதைத் தாண்டி எழுவதும் தான் மீள்தன்மை”
சச்சின் பாராட்டு:
“ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார். அவருடைய 50 ரன்கள், உங்களுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான மனஉறுதியை நினைவூட்டுகிறது. இந்த துணிச்சலான முயற்சி நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் சிறப்பாக விளையாடினார்கள், ரிஷப்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 29 வயதான தமிழக வீரரை உடனடியாக இங்கிலாந்துக்கு அழைத்த இந்திய அணியின் நிர்வாகம் – விவரம் இதோ
அதே போல முன்னாள் வீரர் இர்பான் பதான். “உங்களுடைய நாட்டுக்காக எந்தளவில் விளையாடினாலும் இது போன்ற தைரியம் மற்றும் போராட்ட குணத்தைக் காண்பிக்க வேண்டும். காயத்தையும் தாண்டி பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்க்கு தலை வணங்குகிறேன் (ஹேட் ஸ் ஆஃப்)” என்று பாராட்டியுள்ளார். முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா. “ஆண்டகுவாவில் அனில் கும்ப்ளே தாடை உடைந்ததைத் தாண்டி விளையாட வந்ததைப் பார்த்துள்ளேன். அது போன்ற நிகழ்வை இனிமேல் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் ரிஷப்பின் தைரியம் அங்கே இருக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.



