இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த இந்தியா அடுத்ததாக 3வது போட்டியில் விளையாடி வெற்றி காண தயாராக உள்ளது.
முன்னதாக இத்தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி முதன்மை பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பெரிய ரன்கள் குவித்து வருகிறார். முதல் போட்டியிலேயே 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த அவர் 2வது போட்டியிலும் 90 ரன்கள் குவித்து அசத்தினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்தி அதிக சதங்கள் மற்றும் சிக்சர்கள் அடித்த இந்திய கீப்பராகவும் அவர் சாதனை படைத்தார்.
கில்கிறிஸ்ட்டை விட பெஸ்ட்:
சேனா நாடுகளில் 2000 ரன்கள் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்த அவர் ஒரே போட்டியில் 2 சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையையும் சமன் செய்தார். அதனால் தோனி, ஆடம் கில்கிறிஸ்ட் போல ரிஷப் பண்ட் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருவதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்ட்டை விட ரிஷப் பண்ட் மிகச்சிறந்த தடுப்பாட்ட திறமையைக் கொண்டிருப்பதாக ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே அவரால் பெரிய ரன்கள் குவிக்க முடிவதாகவும் அஸ்வின் பாராட்டியுள்ளார் எனவே தோனி, கில்கிறிஸ்ட் போன்ற கீப்பர்களுடன் அவரை ஒப்பிடாமல் முதன்மை பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிட வேண்டும் என்றும் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் தம்முடைய திறமைக்கு நிகராக சாதிப்பதைப் பார்க்க விரும்புகிறேன்”
அஸ்வின் பாராட்டு:
“அவர் நம்மைத் தொடர்ந்து பொழுதுபோக்க வேண்டும். அதே சமயம் தேவைப்படும் போது அவர் அணிக்காக நங்கூரமாகவும் விளையாட வேண்டும். ரிஷப் இனிமேலும் புதியவர் கிடையாது. நான் ரிஷப் பண்ட்டை அவருடைய தரத்திற்கு தரப்படுத்த விரும்புகிறேன். அற்புதமான வீரரான அவர் ஆடம் கில்கிறிஸ்ட் கிடையாது. பலரும் அவரை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள்”
இதையும் படிங்க: தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய ஸ்கில் இதுதான்.. அதை பார்த்து வியந்து போயிருக்கேன் – விராட் கோலி கருத்து
“அவரிடம் இந்தளவுக்கு நல்ல தடுப்பாட்டம் கிடையாது. ஆனால் ரிஷப் பண்ட் உயர்தரமான தடுப்பாட்டத்தைக் கொண்டுள்ளார். எனவே அவரை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடாமல் சில சிறந்த பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிட வேண்டும். ரிஷப் பண்ட் அவர் செய்யக்கூடிய வழக்கமான விஷயங்களை செய்வார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜூன் 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.



