
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி உச்சகட்ட பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. அந்தப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அப்போட்டியில் இந்தியா 193 ரன்களை துரத்தியதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டாப் ஆர்டரில் கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்ததைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை. அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் அடித்து வெற்றி பெற வைக்கப் போராடினார். ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா முடிந்தளவு போராடி விக்கெட்டை இழந்தார்.
அதே போல கடைசி பேட்ஸ்மேனாக வந்த முகமது சிராஜ் தம்முடைய முழு இதயத்துடன் விளையாடினார். ஆனால் சோயப் பசீர் வீசிய ஒரு பந்தை அவர் நடு பேட்டில் தடுத்தும் தரையில் பட்டு ஒற்றை பெய்ல்ஸை கீழே தள்ளி இந்தியாவை தோற்கடித்தது. அந்த வகையில் போராடியும் அதிர்ஷ்டமின்மையால் தோற்ற காரணத்தால் சிராஜ் மைதானத்திலேயே கண்ணீர் விடாத குறையாக சோகத்தில் அமர்ந்தார்.
அப்போது ஜோ ரூட், ஜாக் கிராவ்லி ஆகியோர் அவருடைய தோள் மேலே தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்கள். இந்நிலையில் அப்போட்டியில் சிராஜ் 3 சிக்ஸர்கள் அடித்து ஃபினிஷிங் செய்வார் என்று தம்முடைய அப்பா சொன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். கடைசியில் சிராஜ்க்கு ஆறுதல் சொன்ன ஜோ ரூட் ஜென்டில்மேன் என்றும் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “பென் ஸ்டோக்ஸ் நம்ப முடியாத வகையில் பவுலிங் செய்தார். அப்போட்டி பற்றி என்னுடைய அப்பாவுடன் விவாதித்தேன். அப்போது சிராஜ் 3 சிக்ஸர்கள் அடித்துப் போட்டியை முடிப்பார் என்று அவர் சொன்னார். அவரிடம் தயவு செய்து நகைச்சுவையை நிறுத்துங்கள் என்று சொன்னேன். அது என்ன ஒரு அற்புதமான போட்டி. இரு அணிகளும் சமமாக வரைமுறைக்குட்பட்டு போராடினார்கள்”
இதையும் படிங்க: எம்.எஸ் தோனியிடம் இருந்து சுப்மன் கில் அந்த அட்வைஸ்ஸை கேட்டு கத்துக்கனும் – கேரி கிறிஸ்டன் கருத்து
“கடைசியில் ரூட், கிராவ்லி ஆகியோர் சிராஜை சுற்றி ஆறுதல் சொன்னார்கள். ராஜஸ்தான் அணியில் நான் ரூட்டுடன் இருந்தேன். ஜென்டில்மேனான அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி ராகுல் டிராவிட் கேட்ச் சாதனையை உடைத்தார். வெற்றிக்காக நீங்கள் விதிமுறைக்குட்பட்ட எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று போராடலாம். கடைசியில் அவர் செய்தது நெகிழ வைத்தது. அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு. அது சினிமாவைப் போல் இருந்தது” எனக் கூறினார்.