இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறும் போதெல்லாம் ரசிகர்கள் வீரர்களை கொண்டாடுவதும் தோல்வியை சந்திக்கும் போது விமர்சிப்பதும் வாடிக்கையாகும். அதை விட இந்திய அணிக்காக விளையாடும் சில வீரர்களின் ரசிகர்கள் தங்களை தாங்களே பிரித்துக் கொண்டு சமூக வலைதளங்களில் மோதுவதும் வாடிக்கையாகி வருகிறது. இத்தனைக்கும் அந்த வீரர்கள் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடுகிறார்கள்.
ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எங்கள் வீரர் தான் பெரியவர், உங்கள் வீரர் தான் சிறியவர் என்று மோதிக்கொள்வது சர்வ சாதாரணமாகி விட்டது. இந்நிலையில் இப்போதெல்லாம் இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தேவையின்றி சண்டையிட்டுக் கொள்வதை பார்ப்பது தமக்கு வருத்தமளிப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதைப் பார்க்கும் போது நமது ரசிகர்களுக்குள் ஏன் இவ்வளவு விஷம் இருக்கிறது என்ற வியப்பு ஏற்படுவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்குள் விஷம்:
குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் ரசிகர்கள் மிகவும் ஆக்ரோசமாக சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதாக அஸ்வின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மேலும் தாம் சச்சின் ரசிகன் என்றாலும் அதற்காக டிராவிட்டை எப்போதும் திட்ட மாட்டேன் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“கிரிக்கெட்டின் ரசிகனாக நான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகன். அதற்காக நான் ராகுல் டிராவிட் அவர்களை சுமாராக பேசுவேன் என்று அர்த்தமல்ல. ராகுல் டிராவிட்டையும் எனக்கு அதிகமாக பிடிக்கும். ஆனால் சச்சின் டெண்டுல்கரை அதை விட பிடிக்கும். அனில் கும்ப்ளே பாய் எனக்கு ரோல் மாடல் போன்றவர். ஹர்பஜன் சிங்கையும் நான் பார்த்து வளர்ந்தேன்”
வன்மம் ஏன்:
“நான் இப்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பற்றி எனக்கு நீண்ட காலம் தெரியும். அதற்காக அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிநபர்களும் தங்களுடைய சொந்த வழியில் சிந்திப்பார்கள்”
இதையும் படிங்க: 435 ரன்ஸ்.. அயர்லாந்தை சூறையாடிய இந்தியா மெகா வெற்றி.. மந்தனா சரவெடி சாதனை.. ப்ரதிகா உலக சாதனை
“எனவே அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். நான் இன்று ரன்கள் அடிக்காததால் நாளையும் அடிக்க மாட்டேன் என்று அர்த்தமல்ல என ரோகித் சர்மாவும் கூறியிருந்தார்” எனக் கூறினார். உண்மையில் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அந்த காலங்களிலும் கபில் தேவ், கவாஸ்கர் என 2 நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் சலசலப்புகள் இருந்தாலும் தற்போது சமூக வலைதளங்களில் மோதும் நவீன கால ரசிகர்களை போல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



