இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வந்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் சம்பிரதாய 3வது போட்டி ஜனவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிரிதி மந்தனா – பிரதிகா ராவல் ஆகியோர் சேர்ந்து ஆரம்பத்திலேயே அயர்லாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார்கள். மறுபுறம் முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதால் அயர்லாந்து வீராங்கனைகள் சுமாராகவே பவுலிங் செய்தனர்.
சூறையாடிய இந்தியா:
அதை பயன்படுத்திய அந்த ஜோடி டி20 போல அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் குவித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் அடித்தது. தொடர்ந்து வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 26.4 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. அதில் மந்தனா 70 பந்துகளில் சதத்தை அடித்து 12 பவுண்டரி ஏழு சிக்ஸருடன் 135 (80) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய ராவல் 20 பவுண்டரி 1 சிக்சருடன் சதத்தை அடித்து 154 (129) ரன்கள் விளாசி அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து ரிச்சா கோஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 59 (42), டேஜல் 28 (25), ஹர்லீன் தியோல் 15, ஜெமிமா 4*, தீப்தி சர்மா 11* ரன்கள் எடுத்தனர். அதனால் 50 ஓவரில் அயர்லாந்தை சூறையாடிய இந்தியா 435-5 ரன்கள் குவித்தது.
மந்தனா சரவெடி சாதனை:
அதன் வாயிலாக ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து வரலாறு படைத்தது. இதற்கு முன் 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்திய ஆடவர் அணி 418-5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 6 இன்னிங்சில் அதிக ரன்கள் (444) குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை பிரதிகா ராவல் படைத்துள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் 434 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதே போல ஸ்ம்ரிதி மந்தனா மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனையாக வரலாறு படைத்தார். அது போக அதிவேகமாக சதத்தை (70 பந்துகளில்) அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2024இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கௌர் 87 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: கோலி காலம் கடந்துட்டாரு.. 2 காரணம் இது தான்.. கம்பீர் புதிய டிராவிட், சச்சினை கண்டுபிடிக்கனும்.. டேவிட் லாய்ட்
பின்னர் 436 ரன்களை துரத்திய அயர்லாந்தை 31.4 ஓவரில் 131க்கு சுருட்டி வீசிய இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா 300க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்து 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அயர்லாந்துக்கு அதிகபட்சமாக சாரா போர்ப்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.



